கழகத் தோழர்கள் உங்களை என்றும் சிறந்த ஜனநாயகவாதியாகவே காண விருப்பப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.அன்புச்செல்வன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடித்ததில், “தலைவருக்கு இனிய கடிதம் அன்புச்சகோதரர் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே,
அன்பான வணக்கம்,
இந்திய நாட்டில் அனைத்து மாநிலங்களையும் முந்திக்கொண்டு டைடல் பார்க் அமைத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அதன் காரணமாக தமிழக இளைஞர்கள் உலகெங்கும் சென்று பொருள் ஈட்டிப்பயன் அடைந்தனர். கணினித் துறையில் சென்னையில் வேலைவாய்ப்புகள் பன் மடங்கு பெருகின.
மென்பொருள் (Software) தயாரிப்பு நிறுவனங்கள் சென்னையை தலைமையிடமாக ஆக்கிக் கொண்டனர். தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இச்செயல் அடிப்படையாக அமைந்தது. கடந்த பத்தாண்டுகளில் ஆளும் கட்சியினர் (அ.தி.மு.க. வினர் ) தங்களது தனிப்பட்ட பொருளாதாரத்தை மட்டும் வளர்த்துக் கொண்டனர், இதன் பயனாக தமிழகம் பலவகையிலும் பின் தங்கியது. தமிழர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாயினர்.
இதனைத் தொடர்ந்து, உங்களது தலைமையிலான கழக ஆட்சியில் தொழில்துறை சார்ந்த முனைப்புகள் வேகம் கூட்டியுள்ளது அடுத்த தலைமுறையைப் பாதுகாக்கும். ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் தொழில் துறையில் 132 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுமார் ரூபாய் 2.2 லட்சம் கோடிகளுக்கு கையெழுத்திடப்பட்டன, அதில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஒரு முக்கிய சாதனையாகும்.
இதன் பயனாக தமிழக இளைஞர்களுக்குவேலைவாய்ப்புகள் பெருகும். பல லட்சக்கணக்கான தமிழர் குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமைக்கு ஆளாவீர்கள். உங்களது வழிகாட்டுதலில் கடமையாற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசுவை, தங்கமான அமைச்சர் என்று பாராட்டியது மிகவும் பொருத்தமான ஒன்று. உங்கள் மனதின் ஆழத்திலிருந்து வெளியான வார்த்தைகள்.
தமிழகத்தின் நிலைத்த மற்றும் நீடித்த பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக உங்களது தொழிற்துறை அமைச்சகம் அமையும்.
06.07.2022 அன்று the Hindu ஆங்கில நாளிதழ் பக்கம் 8 ல் ஓர் செய்தி பதிவிட்டுள்ளது. கடந்த 15 மாதங்களில் தமிழ்நாட்டில் STARTUP மற்றும் மின்சார வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடுகள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன என்ற செய்தியை படித்து விட்டு எனது நண்பரான ஓர் தொழில் அதிபர், தங்களைப் பற்றியும் தமிழ்நாடு தொழில் முனைவோருக்கு வழங்கி வரும் சுமூகச்சூழலை மிகவும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தார். இதன் தொடர் விளைவாக மிக விரைவில் தமிழகம் இந்தியாவின் சிறந்த மாநிலமாக திகழும் என்று உறுதிபடத் தெரிவித்தார். பொருளாதாரமும், வேலை வாய்ப்புகளும் பெருகும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அடுத்த தலைமுறை வளர்ச்சிக்கு வித்திட வாழ்வியல் அறிவியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி முன்னேற்றத்திற்கான கொள்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டது தமிழ்நாட்டை புதிய தொழில் முனைவுகளும், தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். பெண் கல்வியின் முக்கியத்தை உணர்ந்து அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் அவர்கள் மேற்படிப்பை முடிக்கும் வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்று அறிவிப்புடன் அதற்காக ரூபாய் 698 கோடியை ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறுவர். இதனை பாராட்டி தினத்தந்தி நாளிதழ் 06.07.2022 தேதியன்று தலையங்கம் தீட்டியுள்ளது. பெண் கல்வியையும், அரசாங்கப் பள்ளிகளில் மாணவிகள் சேர்வதற்கு ஆர்வம் காண்பிப்பர் என்பது உறுதி. பெண்கள் உயர்ந்தால் தமிழகமே மென் மேலும் வளரும். மிகவும் பயனுள்ள இத்திட்டத்தினால் தமிழக மகளிர் உங்களைப்போற்றி பாராட்டுவர் என்பது உறுதிப் பெண்களின் நாயகனாக வலம் வரப் போகிறீர்கள்.
ஒரு பக்கம் ஆட்சியைக் கொண்டுதமிழர்களின் வாழ்வை வளமாக்கும் பணியை தொய்வின்றி செய்து வரும் வேளையில், ஆட்சிக்கட்டிலுக்கு அடிப்படையானது கழகம் என்றுணர்ந்து தாங்கள் செயல்படும் விதம் அருமை. தலைவர் என்ற முறையில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வரும் அதே வேளையில், இளைஞர் அணியின் செயலாளரான தம்பி உதயநிதி தமிழகமெங்கும் திராவிட மாடல் பாசறைகளையும், கழக மூத்த முன்னோடிகள் / உறுப்பினர்களை மாவட்டம் தோறும் அடையாளங்கண்டு அவர்களைக்கௌரவிக்கும் பாங்கும் சிறப்பான ஒன்று. ஆக்கப்பூர்வமான அவரது கழகப் பணிகள் தொடரட்டும், அவருக்கு எனது அன்பு வாழ்த்துகள்.
நாமக்கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திரும்பியதிலிருந்து வெற்றி அழகன் உங்களின் பேச்சை சிலாகித்து பாராட்டினான். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் உரையாற்றியது சிறப்பாக அமைந்தது.
உள்ளாட்சிப் பொறுப்புகளில் பதவியேற்றுக்கொண்டவர்கள், ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பின் தன்மையும், அதற்கு செயலாற்ற பேரறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமான கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் தொண்டாற்ற வேண்டும் என்று தலைவனின் அன்புக் கட்டளையாக அறிவுறுத்தியது மிகவும் பாராட்டுக்குரியது.
அதேபோல் சில நேரங்களில் கட்சியின் நலனுக்காக சர்வாதிகாரியாகச் செயல் படுவதில் ஒன்றும் தவறில்லை . அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. (குறள் எண் - 513) என்ற குறளுக்கு பொழிப்புரையாக; பொறுப்பில் உள்ளவர்களுக்கு நீங்கள் அறிவுறுத்தியது காலத்திற்கேற்ப அமைந் துள்ளது.
இக்குறளுக்கான பொழிப்புரை: நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு என்ற திருக்குறள் வழி நின்று அறிவுறுத்தியது மிகவும் இன்றி மையாதது.
கழகத் தோழர்கள் உங்களை என்றும் சிறந்த ஜனநாயகவாதியாகவே காண விருப்பப்படு வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன், ஏனென்றால் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பிகள், கலைஞரின் உற்ற உடன்பிறப்புகள், உங்களின் இரத்த நாளங்கள்.
வாழ்க உங்களின் திராவிடத் தொண்டு, வளர்க உங்கள் புகழ் வணக்கம், நன்றி அ.அன்புச்செல்வன்