தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். தந்தையை இழந்த இவர், தாயார் மற்றும் வயதான பாட்டியுடன் குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலால் இவரது வீடு முற்றிலும் சேதம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து சேதம் அடைந்து தார்ப்பாய், ஓலைகளை வைத்து மறைக்கப்பட்ட வீட்டில் இவரது குடும்பம் வசித்து வந்தது.
ஏழ்மையால் இவர் அவதிப்பட்டு வந்தாலும் படிப்பைத் தொடர்ந்து இவர் +2 முடித்துவிட்டு, அரசு கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரின் தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தனது நிலையை கூறி கான்கிரீட் வீடு கட்டி தரமுடியுமா சார்? என கேள்வியெழுப்பியிருந்தார்.
மாணவரின் ஏழ்மை நிலையையும், அவர் தொடர்ந்து படித்து வருவதையும் அறிந்த தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ்,அவருக்கு வீடு கட்டித்தர முன்வந்துள்ளார். இதற்கான மாணவன் வசித்த வசித்த வீட்டின் அருகில் உள்ள அவர்களுக்கு சொந்தமான இடத்தில், பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து மாணியதொகை 1.8 லட்சத்துடன், தஞ்சையில் செயல்பட்டு வரும் மதர் தெரசா அறக்கட்டளை மூலம் 3.7 லட்சம் நன்கொடை பெற்றுக்கொடுத்துள்ளார்.
மேலும், தன்னுடைய நேரடி கண்காணிப்பில் அழகிய புதிய கான்கிரீட் வீட்டை கட்டி முடித்த மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று கிராம மக்களின் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மதர் தெரேசா பவுன்டேசன் சேர்மன் திரு. சவரிமுத்து மாணவர் வேல் முருகனின் உயர்கல்வி செலவை முழுவதும் ஏற்பதாக தெரிவித்துள்ளார். மாணவனின் விடாமுயற்சியும், மாவட்ட ஆட்சித்தலைவரின் மனிதநேய உதவியும் வடக்கூர் கிராம மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது..