செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சென்னையிலேயே சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த பூங்காவில், சிங்கம், புலி, வரிக்குதிரை, பறவைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் இருக்கிறது.
இந்த பூங்காவில் இருக்கும் விலங்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான மருத்துவ உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சில விலங்குகள் நோய், வயது மூப்பு என்று எதிர்பாராத விதமாக உயிரிழந்து வருகின்றன.
அந்த வரிசையில் கடந்த 6 மாதங்களில் மட்டுமே 6க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளன. மேலும் கடந்த மாதம் 2 சிங்கங்கள் இருந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தற்போது நோய்வாய்ப்பட்டிருந்த புவனா (25) என்ற ஒரு சிங்கம் உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "புவனா என்கின்ற விஜி என்ற பெண் சிங்கம் மலக்குடல் நீழ்ச்சி தொங்கல் பாதிப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு மாத காலமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்தது. அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது.
எனவே தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவால் அந்த விலங்குக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், செய்யப்பட்ட அறுவை சிகிச்சை சிங்கத்தின் வயது முதிர்வு காரணமாக பலனின்றி உயிரிழந்தது" என குறிப்பிட்டிருந்தது. தொடர்ந்து விலங்குகள் உயிரிழந்து வருவது பூங்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.