தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தி.மு.க அலுவலக புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வழங்கினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ,”புதிய அலுவலக கட்டத்திற்கு, அடிக்கல் நாட்ட தங்கமுலாம் பூசப்பட்ட செங்கல்லை என்னிடத்தில் வழங்கினர். செங்கல்லுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும்.
பூஜைகள் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கலாம். ஆனால் எனக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. இதைப்பார்த்து எதிரிகள் வயிறு எரிவார்கள். அதற்காகவே அமைதியாகப் பூஜைகளில் கலந்து கொண்டேன்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் இதுவரை அப்படியேதான் இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை பணிகள் எதுவும் தொடங்கவில்லை. அப்படியேதான் இருக்கிறது.
இந்த புதிய கட்டட திறப்பு விழா அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். இந்த கட்டட திறப்பு விழவில் நானும் கலந்து கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.