சென்னை கோபாலபுரத்தில், கடந்த 15 ஆம் தேதி மாலை, தனியே நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரிடம், பைக்கில் வந்த இரண்டு பேர் செல்போனைப் பறித்து சென்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த 19ஆம் தேதியன்றும் அதே பகுதியில் நடந்து சென்ற 62 வயதான மூதாட்டியின் கையிலுள்ள மொபைல் போனையும் பைக்கில் வந்த இரண்டு பேர் பறித்துச் சென்றனர்.
இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே பகுதியில் நடைபெற்றது என்பதால் பாதிக்கப்பட்ட இருவரும் சம்பவம் நடைபெற்ற அன்றே இராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார்கள் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்
இதனிடையே கடந்த 18 ஆம் தேதி அபிராமபுரமதிலுள்ள தனியார் மருத்துவமனை அருகே, நடந்து சென்ற ஒருவரிடம் பைக்கில் வந்த இரண்டு பேர் மொபைல் போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றதாக அபிராமபுரமதிலுள்ள காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாக சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், இந்த மூன்று சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதில், அவர்களின் அடையாளங்கள் எதுவும் சரிவர தெரியவில்லை.
இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், சுமார் 42 சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பைக்கில் வந்த நபர்கள் பதிவானது தெரிந்ததையடுத்து அவர்கள் குறித்தும் விசாரித்தனர். பின்னர் அவர்கள் சிந்தாதிரிப்பேட்டை பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.
அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், அந்த பைக்கில் வந்தவர்களில் ஒருவர் பெண் என்பது தெரியவந்தது. மேலும் பைக்கில் உள்ள எண்ணை வைத்து விசாரித்ததில், அந்த பைக்கின் உரிமையாளர் திருத்தணியில் இருப்பதாக தெரிந்தது.
இதைத்தொடர்ந்து மொபைல் போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் மொபைல் எண்ணை கண்டறிந்த காவல்துறையினர், அவர் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்ததை தெரிந்துகொண்டனர்.
பின்னர், அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில், தனியே செல்லும் பெண்களை குறிவைப்பதாகவும், ஆதாம் மார்க்கெட் பகுதியில் உள்ள லாட்ஜில் செல்போன் பறிப்பு சம்பவத்துக்குப் பயன்படுத்திய பைக்கை மறைத்து வைத்துள்ளதாகவும், தன்னுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இருக்கும் இடத்தையும் கூறினார்.
இதையடுத்து அவர்களையும் பிடித்து விசாரித்ததில், அந்த இளம்பெண் 16 வயது மிக்க சிறுமி என்பதும், தங்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, தற்போது மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த சிறுமியுடன் சேர்ந்து அவரது நண்பர்களான விவேக் என்கிற குள்ளா (26), ஜெகன் (26), ஜெகதீசன் (24), சரவணபெருமாள் (19) அனைவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து ஏழு செல்போன்கள், ஒரு ஆப்பிள் ஐ பேட், இரண்டு பைக்குகள், 15,000 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.