தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கல்வி என்பது மாநில கொள்கை எனவும், தேசிய கல்விக் கொள்கை என்பது எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லாத வரைவு கொள்கையாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, அரசு வேலையில் தமிழில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து சமத்துவமான கல்வி என்ற அடித்தளத்தை கொண்டுள்ள மதச்சார்பற்ற தமிழகத்தில், இரு மொழிக் கொள்கையும், தாய்மொழியில் அடிப்படைக் கல்வியும் முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 27.1 சதவீதத்தில் இருந்து 2035ல் 50 சதவீதமாக உயர்த்தும் எண்ணத்தில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டதாகக் கூறும் நிலையில், இலவச கல்வி, மதிய உணவு, இலவச புத்தக்அம், சீருடை, சைக்கிள், காலணி, லேப் டாப், உதவித்தொகை மூலம் 51.4 சதவீத சேர்க்கை விகிதத்தை எட்டி, தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோக்கி பயணிப்பதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கல்வி முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள தேசிய கல்விக் கொள்கை இடை நிற்றலை அதிகரிக்கும் என பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய சூழல், எதிர்கால விருப்பங்களை கருத்தில் கொண்டு, மாநில கல்விக் கொள்கையை வகுக்க டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, இரு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.