நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பில் “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” என்ற பிரமாண்ட நிகழ்ச்சியை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தத் திட்டமிட்டு, திருப்பூர், திருநெல்வேலி, சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 4வது முறையாக நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பில் “எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி, திண்டுக்கலில் நடைபெற்றது.
கடந்த 11ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் ரேடிசன் பார்சன்ஸ் கோர்ட் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டனர். மேலும், திண்டுக்கல்லுக்கு பல்வேறு வகையில் புகழ் தேடித்தருவோரை கவுரவிக்கும் வகையில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அதன்படி, ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு “எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ விருதினை மாவட்ட ஆட்சியர் முனைவர். ச.விசாகன் வழங்கிட, ஆர்.பாலகிருஷ்ணனின் மூத்த சகோதரர்கள் ஆர்.நரசிம்மன் மற்றும் ஆர்.வரதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து ஆர்.பாலகிருஷ்ணன் நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு இடமும் உங்களுடையது, எல்லாரும் நம்மவர்களே "யாதும் ஊரே யாவரும் கேளிர். அதுதான் நமது கடந்த கால நாகரீகத்தில் நாம்கூட்டுக் கற்றுக்கொண்ட பாடம். குறிப்பாக சங்க இலக்கியத்தின் பரிசாக நமக்குக் கிடைத்த புரிதலும் கூட.
இருப்பினும், ஒருவரின் சொந்தப் பிறந்த இடத்திலிருந்து ஒரு பாராட்டு வார்த்தை கிடைப்பதில், ஏதோ சிறப்பு இருக்கிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தின் பன்முகச் சாதனைகளைக் கொண்டாடும் விதமாக, வரலாறு மற்றும் ஆராய்ச்சித் துறையில் பங்களிப்பு செய்ததற்காக கலைஞர் செய்தித் தொலைக்காட்சி எனக்கு விருது வழங்கியுள்ளது.
நேற்று (ஜூன் 11) திண்டுக்கல்லில் விருது பெற விரும்பினேன், ஆனால் எனது தொழில் ஈடுபாடு காரணமாக என்னால் அதைச் செய்ய முடியவில்லை. திண்டுக்கல்லில் நடந்த பிரமாண்ட விழாவில் என் சார்பாக என் மூத்த சகோதரர்கள் ஆர்.நரசிம்மன் மற்றும் ஆர்.வரதன் விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். திண்டுக்கல் ஆட்சியர் திரு.விசாகன் விருது வழங்கினார்” எனத் தெரிவித்துள்ளார்.