கீழடி 8ம் கட்ட அகழாய்வில் பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப் பட்டுவருகின்றன. கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட தளங்களில் கடந்த பிப்ரவரி 13 முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடியில் ஏழு குழிகளும், அகரத்தில் நான்கு குழிகளும், கொந்தகையில் இரண்டு குழிகளும் தோண்டப்பட்டுபணிகள் நடந்து வருகின்றன.
கொந்தகையில் 25 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு அவற்றை முழுமையாக வெளியே எடுக்கும் பணி நடந்து வருகிறது. கீழடியில் இதுவரை நீள் வடிவ தாயகட்டை, உலைகலன், இரண்டு மெகா சைஸ் பானைகள், பானை ஓடுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிதாக தோண்டப்பட்ட குழியில் பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
சிறியதும், பெரியதுமான பாசிகள் அதிகளவில் வெளிப்பட்டு வருகின்றன. கீழடியில் இதுவரை சிவப்பு நிற பாசிகளே அதிகளவில் வெளிப்பட்ட நிலையில் தற்போது பச்சை நிற பாசிகளும் நடுவில் சிறிய துளையுடன் வெளிப்பட்டுவருகின்றன.
செப்டம்பருடன் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோடை விடுமுறை என்பதால் திறந்த வெளி அருங்காட்சிகத்தை காண பலரும் வந்த வண்ணம் உள்ளனர். 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து பலரும் வருகை தந்திருந்தனர்.