சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ்(41), அவரது மனைவி காயத்திரி (39), மகள் நித்யஸ்ரீ(13), மகன் ஹரி கிருஷ்ணன் (8), ஆகியோரை மரம் அறுக்கும் இயந்திர ரம்பத்தால் கொலை செய்து விட்டு, அதே ரம்பத்தால் தானும் கழுத்தை அறுத்து பிரகாஷ் தற்கொலை செய்திருக்கிறார்.
அதிக கடன் தொல்லை காரணமாக பிரகாஷ் தனது மனைவி மகள் மற்றும் மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது போலிசாரின் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி, “கடிதம் எழுதி வைத்து விட்டு சுவற்றில் ஒட்டி விட்டு இறந்திருக்கிறார்கள். அதில் ஒன்றாக சேர்ந்து முடிவெடுத்தாகவும் யாரும் காரணமில்லை என குறிப்பிட்டுள்ளது.
செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அதை ஆய்வுக்கு உட்படுத்தி கடன் தொல்லை, மிரட்டல் இருக்கிறதா என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். அமேசான் தளத்தில் இருந்து எலெக்ட்ரிக் ரம்பத்தை கடந்த 19ம் தேதி டெலிவரி ஆகியுள்ளது.
தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர். முதற்கட்ட புலன் விசாரணையில் இரவு 11 மணிக்கு சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் விவரம் தெரியவரும்.
மயக்க மருந்துகள் கொடுத்து பின்னர் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. 3.50 லட்சத்திற்கான கடன் பத்திரம் கிடைத்துள்ளது தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்.” என காவல் ஆணையர் கூறியுள்ளார்.
இதனிடையே பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து பின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு உதவியாக செய்யவேண்டிய பணிகளை செய்து கொடுக்கும்படி காவல் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்