ஒடிசா மாநிலம், மார்ஷாகாய் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரா ஸ்வைன். லாரி ஓட்டுநரான இவருக்கு சில மாதங்களாக வேலை எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், பாத்தாமுண்டாய் பகுதியில் சில லாரிகள் குழுவாக நின்றிருந்துள்ளன. அங்கு சென்ற கஜேந்திரா ஸ்வைன். ஏதாவது வேலை இருக்கிறதா என அங்கிருந்த லாரி ஓட்டுநர்களிடம் கேட்டுள்ளார்.
அப்போது திடீரென ஒரு லாரி ஓட்டுநர் தனது செல்போனை காணவில்லை என கூறியுள்ளார். இதனால் கஜேந்திரா மீது சந்தேகம் அடைந்த அந்த லாரி ஓட்டுநர் அவரது கைகளை இழுத்து தனது லாரியின் முன்பகுதியில் கட்டியுள்ளார். பின்னர் அவருக்கு செருப்பு மாலை அணிவித்துள்ளார்.
இதையடுத்து லாரியை அதிவேகமாக இயக்கிச் சென்றுள்ளார். லாரியின் முன்பகுதியில் கஜேந்திரா கட்டப்பட்ட நிலையில் லாரி 3 கிலோ மீட்டர் அதிவேகமாக சென்றுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. பின்னர் போலிஸார் அந்த லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஒடிசா மனித உரிமைகள் ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என ஜகத்சிங்பூர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.