திருப்பெரும்புதூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ராமு (45). இவர் திருப்பெரும்புதூர் உயர்நிலை பள்ளி அருகே நேஷனல் சலூன் என்ற முடிதிருத்தம் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் தினேஷ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
இவரது மனைவி ரேணுகா அருகே உள்ள சிப்காட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். ராமுவின் மகன் தினேஷ் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலைக்கு போகாமல் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளான்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு காணாமல் போன தினேஷ் கடந்த ஆண்டு மேல்மருவத்தூர் அருகே அவனைப் பார்த்து குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். மேலும் தினேஷின் குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்ற மாதம் அவனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ் 3 நாளுக்கு முன்பு தான் வீட்டிற்கு வந்துள்ளான். மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த நாள் முதல் வீட்டிலிருந்தபடியே மதுகுடிக்க பணம் கேட்டு பெற்றோர்களிடம் சண்டையிட்டு வந்துள்ளான்.
நேற்றும் வழக்கம் போல் இதே மாதிரி சண்டையிட்டுள்ளான். மகனின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டு மாடியில் உறங்க சென்றுள்ளார் ராமு. அவரது மனைவி ரேணுகா வும் மாடியில் சென்று உறங்கியுள்ளார்.
அதிகாலை மின்சாரம் வந்துவிட்டதாக தனது தாயை கீழே அனுப்பியுள்ளான் தினேஷ். ரேணுகா கீழே சென்ற சில நிமிடங்களில் தூங்கி கொண்டிருந்த தனது தந்தை ராமுவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளான் தினேஷ். ரேணுகா தனது கணவரின் அலறல் சத்தத்தை கேட்டு மேலே வந்து பார்க்கையில் தாயை கண்டவுடன் தினேஷ் தப்பி ஓடி உள்ளான்.
ரத்த வெள்ளத்தில் இருந்த ராமுவை அக்கம்பக்கத்தினர் திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமு பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பெரும்புதூர் போலிசார் தப்பியோடிய தினேஷை தேடி வருகின்றனர். பெற்ற மகனே தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.