தமிழ்நாடு

“மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் நியாயமாக ஆதரித்திருக்க வேண்டும்; ஆனால்..” : முதல்வர் சரமாரி பதிலடி!

யாருக்கும் பதில் சொல்லி நான் என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே எனக்கு நேரம் காணவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் நியாயமாக ஆதரித்திருக்க வேண்டும்; ஆனால்..” : முதல்வர் சரமாரி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலம் மாவட்டத்தில் ஆத்தூரில், தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினர். அப்போது, மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் பொய்யான அவதூறுகளைச் சொல்லி - ஆட்சியின் மீது அவதூறுகளைக் கிளப்புகிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடினார்.

மேலும், தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தேர்தல் வரைக்கும் தான் தி.மு.க தொகுதி - அ.தி.மு.க தொகுதி. தேர்தல் முடிந்ததும் அனைத்துத் தொகுதியும் எனது தொகுதி தான். அந்த எண்ணத்தோடு ஆட்சி நடத்துகிறேன். அதனால் தான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து பாராட்டும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கிறது.

என்னைப் பொருத்தவரையும், மிகுந்த நல்லெண்ணத்தோடு - ஒரு நல்லாட்சியை மக்களாகிய நீங்கள் உருவாக்கினீர்கள். உங்களது நம்பிக்கை வீண் போகவில்லை. அதுதான் உண்மை. இவ்வளவு நன்மைகளும் நடக்க மக்கள் தான் காரணம். அதை நிறைவேற்றிக் கொடுக்கும் கருவி தான் நான்.

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி மலர்ந்துவிட்டது என்று இந்தியாவுக்கே தெரிந்துவிட்டது. இங்கிருந்து சென்ற நிறுவனங்கள் மீண்டும் தொழில் தொடங்க தமிழகம் வருகின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி மலர்ந்துவிட்டது என்று உலகத்துக்கே தெரிந்துவிட்டது.

அதனால் தான் நம்மை வரவழைத்து புதியபுதிய ஒப்பந்தம் போடுகிறார்கள். இப்படி உலகமே உணர்ந்ததை - தமிழ்நாட்டில் உள்ள சிலரால் உணரமுடியவில்லை என்றால் அவர்களுக்காக நான் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.

மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் - நியாயமாகப் பார்த்தால் இதனை ஆதரித்திருக்க வேண்டும். மாறாக திசை திருப்புகிறார்கள். பொய்யான அவதூறுகளைச் சொல்லி - ஆட்சியின் மீது அவதூறுகளைக் கிளப்புகிறார்கள். இந்த அவதூறுகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வாழ்க வசவாளர்கள் என்று பேரறிஞர் அண்ணா சொன்ன சொல்லின் படி நான் எனது இலக்கை நோக்கி நடந்து கொண்டு இருக்கிறேன்.

யாருக்கும் பதில் சொல்லி நான் என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே எனக்கு நேரம் காணவில்லை. இதில் அவர்களுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு எங்கே நேரம் இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories