திருவாரூர் மாவட்டம், கழுவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி. இந்த தம்பதிக்குத் திருமணமாகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் தங்களது பெயரில் சொத்து எழுதிக் கொடுக்கும்படி தனலட்சுமி, மாமியார் ரஞ்சிதமிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் வாரிசு இல்லாதவர்களுக்குச் சொத்து எழுதிக் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி மகேந்திரன் வெளியூர் சென்றுள்ளார். அப்போது தனலட்சுமி வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் தனலட்சுமி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாமியார் ரஞ்சிதமிடம் போலிஸார் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்ததில், குழந்தை இல்லாததாலும், சொத்தை எழுதிக் கொடுக்கும்படி கேட்டதாலே தனலட்சுமியை அடித்து கொலை செய்ததாக மாமியார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த தனலட்சுமியின் தலையில் இரும்புக் கம்பியைக் கொண்டு தாக்கி கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு உறவினரின் மகன், பேரன் முறையைச் சேர்ந்த விஜயராமன் துணையாக இருந்துள்ளதாகவும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளை, மாமியாரே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.