32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். இது நீதி - சட்டம் - அரசியல் - நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு! தமிழ்நாடு அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :- “பேரறிவாளன் விடுதலையின் மூலமாக மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர்கள் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதி ஆகி இருக்கிறது. இது தமிழ்நாடு அரசால், இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
* 2018 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவை கூடி, எழுவர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது.
அதற்கு தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக ஒப்புதல் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அதனை அளவுக்கு மீறி தாமதம் செய்தார் தமிழக ஆளுநர். உடனடியாக இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
* 2020 நவம்பர் மாதம் மாண்புமிகு ஆளுநர் அவர்களைச் சந்தித்து, கடந்த முப்பது ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது வலியுறுத்தினேன்.
2018 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னேன். பரிசீலிப்பதாக ஆளுநர் அவர்களும் அப்போது சொன்னார்.
ஆனால் முடிவெடுக்கவில்லை. திடீரென்று, குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலைக் கேட்டு அனுப்பியதாக ஆளுநர் மாளிகை அறிக்கை கொடுத்தது. இது அனைவர்க்கும் அதிர்ச்சி அளித்தது.
* ஆட்சி மாற்றம் நடந்தது. கழக ஆட்சி அமைந்ததும், குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தோம். ஆளுநர் உங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்துக்கு விளக்கம் தாருங்கள் என்று விளக்கம் கேட்டோம்.
*குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அவர்கள் இப்படி ஒரு கடிதம் அனுப்பி இருந்ததால், குடியரசுத் தலைவரிடம் விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது.
அதேநேரத்தில், பேரறிவாளன் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்குத்தான் அனைத்து உரிமைகளும் உள்ளது என்று வாதிட்டோம்.
* கிடைத்த வாய்ப்பு அனைத்தையும் பயன்படுத்தி - மாநில அரசுக்கு அரசியல் சட்டம் வழங்கி உள்ள 161 ஆவது பிரிவு உரிமையை நிலைநாட்டினோம்.
* இது முப்பது ஆண்டுகளைக் கடந்த சட்டப்போராட்டம் ஆகும். சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
* கடந்த 2000-ஆம் ஆண்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூவரது தண்டனையையும் ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.
* அரசியல் சட்டம் 161 ஆவது பிரிவின் படி மாநில அரசின் உரிமையை நிலைநாட்டி அவர்களது விடுதலைக்கு தொடர்ந்து தி.மு.க குரல் கொடுத்து வந்தது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளும் கட்சியாக ஆனபோதும் ஒரே நிலைப்பாட்டை தி.மு.க எடுத்தது.
* ஆளும்கட்சியாக ஆனபிறகும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் - ஆளுநருக்கு அழுத்தம் - ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தல் - உச்சநீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்கள் என நாலா பக்கமும் முனைப்புடன் திமுக அரசு இயங்கியது. இறுதித் தீர்ப்பு இந்த அடிப்படையில் கிடைக்க இவை மிக முக்கியமான அடித்தளத்தை அமைத்திருந்தது.
* சிறையில் இருந்த பேரறிவாளன், சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் சட்ட உரிமையின் அடிப்படையில் பரோல் கேட்டார்.
மனிதாபிமான அடிப்படையில் அரசு அவருக்கு அந்த உரிமையை 10 முறை வழங்கியது. பரோலில் இருந்தபடியே தனது சட்டப்போராட்டத்தை நடத்தி முதலில் பிணையில் வந்தார். இப்போது விடுதலை ஆகி இருக்கிறார்.
முப்பத்தி இரண்டு ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்த அந்த இளைஞர் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.