மாநில மொழிகளை மழுங்கடிக்கும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று ‘தினகரன்’ நாளேடு (16.5.2022) தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தபால் அலுவலகங்கள், ரயில்வே அலுவலகங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பு மறைமுகமாக தொடர்ந்து நடந்து வருகிறது. ஒன்றிய அரசின் துறைகளில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கல்வித்துறையில் இந்தி திணிப்பு தொடங்கி விட்ட நிலையில், ஜிப்மர் ேபான்ற ஆராய்ச்சி நிறுவனங்களிலும் இந்தி திணிப்பை ஒன்றிய அரசு லாவகமாக கையாண்டு வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராகவும், மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டும், ஒன்றிய அரசு அவற்றை கண்டுகொள்வதே இல்லை.
தற்போது வங்கிகளிலும் வடமாநிலத்தவரை நுழைக்க முயற்சிகள் அப்பட்டமாக நடக்கின்றன. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் அதிகாரிகள் மட்டுமே வெளிமாநிலத்தவர்களாக இருந்து வந்தனர். ஆனால், தற்போது கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களில் கூட வடமாநிலத்தவர்கள் நுழைய வழிவகை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வங்கிகளில் கிளார்க் பணிகளுக்கு அந்தந்த மாநில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என ஐபிபிஎஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் உள்ளிட்ட பணிகளில் இருப்போர் தமிழே தெரியாமல் இருக்கும்போது பொதுமக்கள் என்ன பாடுபடுவர் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம், கிளார்க் பணிகளுக்கு மாநில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய கட்டாயமில்லை என அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட உள்ள 843 பணியிடங்களில் 400க்கும் மேற்பட்ட பணிகள் வெளிமாநிலத்தவர்களுக்கு ஒதுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு பணிகளில் வெளிமாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரிப்பால், பொதுமக்கள் படும்பாடு சொல்லி மாளாது. ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கு கூட விண்ணப்பங்களை ஆங்கிலத்தில் நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.
அஞ்சல் சேவைகள், வங்கி சேவைகள் ஆகியவற்றிலும் தமிழ் தெரியாத அதிகாரிகளால் பொதுமக்கள் அருகில் உள்ள தமிழ் தெரிந்த ஊழியர்களின் உதவிகளை நாட வேண்டியதுள்ளது. புதியதாக பணியில் சேரும் வெளிமாநிலத்தவர்கள் கிராமப்புற வங்கிகளில் பணியமர்த்தப்பட்டால் பொதுமக்களுக்கு வங்கிகள் குறித்த நம்பிக்கையே போய்விடும். எனவே நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் மாநில மொழிகளில் எழுத, பேச தெரிந்தவர்களை பணி அமர்த்துவதே நல்லது. மாநில மொழிகளை மழுங்கடிக்கும் போக்கை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். வங்கி, தபால், ரயில்வே சேவைகள் வழக்கம்போல் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.