தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு, வாட்டிகனில் இன்று புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு வாடிகனில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்தாய் வாழ்த்து பாடி தமிழைப் பெருமைப்படுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் கிராமத்தில் 1712ம் ஆண்டு, ஏப்ரல் 23 - ம் தேதி மறைசாட்சி தேவசகாயம் பிறந்தார். கடவுள் முன்னிலையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உண்மையை நிலைநாட்ட பெரிதும் விரும்பினார். அப்போது ஏற்பட்ட சமய வேறுபாடுகள் காரணமாக மன்னராட்சியில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1752 ஜனவரி 14 - ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பகுதி கத்தோலிக்க கிறித்தவர்கள், தேவசகாயத்தின் உடல் பகுதிகளை எடுத்துவந்து நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் ஆலய வளாகத்தில் அடக்கம் செய்தனர்.
அவரை மறைசாட்சியாக கருதியதாலேயே, ஆலய வளாகத்தில் அவருக்கு கல்லறை அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மறைந்த தேவசகாயத்திற்கு இன்று புனிதர் பட்டம் அளிக்கப்படுகிறது.
இத்தாலி நாட்டின் வாட்டிகனில் போப் பிரான்சிஸ், தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்குகிறார். இதை முன்னிட்டு வாட்டிகனில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடி தமிழைப் பெருமைப்படுத்தினர்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்ற பெருமையோடு, புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் பாடலாக உள்ள தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது உலக அரங்கில் பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றுள்ளது.