தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டில் சாமானிய மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செய்து காட்டி மக்கள் மத்தியில் நீங்காத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இடம் பிடித்துள்ளார்.
குறிப்பாக, இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும 48, சமத்துவபுரங்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமல்லாது சொல்லாத பல வாக்குறுதிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.
இதிலும், குறிப்பாகப் பேருந்தில் மகளிருக்கு இலவசம் என்ற திட்டத்திற்கு தனது முதல் கையெழுத்திட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த ஒற்றை கையெழுத்தால் பலகோடி பெண்கள் பயணடைந்து வருகின்றனர்.
ஒவ்வொரு மகளிருக்கும் சராசரியாக ரூ.600 லிருந்து ரூ.1200 வரை மிச்சமாகிறது. மேலும் இந்த திட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பெண்கள் அதிகளவிற்குப் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குப் பேருந்தில் கட்டணம் இல்லை என்ற அறிவிப்பையும் சட்டமன்றத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். இப்படி மக்களுக்காக ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்துப் பார்த்து நடைமுறைப் படுத்தி வருகிறது தி.மு.க அரசு.
இந்நிலையில், தி.மு.க அரசின் ஓராண்டு சாதனையைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயரப்போவதாக பொய்யான தகவலை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும், 2018ம் ஆண்டு அ.தி.மு.க அரசு உயர்த்திய பேருந்து கட்டணத்தைப் பட்டியலிட்டு அதை தற்போது தி.மு.க அரசு உயர்த்த உள்ளதாக திரித்து பொய்யான செய்திகளைச் சிலர் வெளியிட்டு வருகின்றனர். மேலும் சில ஊடகங்கள் கூட இதை நம்பி செய்தியை வெளியிட்டுள்ளன.
இந்த பொய்யான தகவலுக்கு பலர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தி.மு.க அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதே உண்மை.