தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சிவாபிள்ளை. இவரும் செக்காரகுடி, சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பேச்சியம்மாளும் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணம் முடிந்த 15 நாட்களிலேயே சிவாபிள்ளை இறந்துவிட்டார். 20 வயது தான் ஆன நிலையில், கணவனை இழந்து நின்ற பேச்சியம்மாளை , வேறொரு திருமணம் செய்துகொள்ளுமாறு உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் 15 நாட்கள் திருமண வாழ்க்கையில் இருந்ததால் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
பின்னர் சொந்த ஊரில் இருந்து வேறு ஊருக்கு இடம்பெயர்ந்த பேச்சியம்மாள் அங்கு கிடைத்த சிறு சிறு வேலைகளை பார்த்து வந்துள்ளார். ஆனால் அங்கு அவர் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் விரக்தியடைந்த பேச்சியம்மாள், தன் மகளுக்கு இந்த சமூகத்தில் ஒரு அரணாக இருக்க வேண்டும் என்றும், அப்பா இல்லை என்ற குறை இருக்கக்கூடாது என்பதற்காகவும் தன்னை ஆணாக மாற்றி முத்துவாக மாறியுள்ளார்.
வறுமையை துணிச்சலாக எதிர்க்கொண்ட முத்து:
வறுமையின் காரணமாக பல ஊர்களில் தன்னை ஆணாகவே காட்டிக்கொண்டு வலம் வந்த அவர், வெளியூரில் அண்ணாச்சி என்ற பெயரோடு வாழ்ந்து வந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு தூத்துக்குடிக்கு வந்த முத்துவை, ஊர்மக்களால் அடையாளம் காணமுடியாத அளவிற்கு மாறியிருந்தார்.
30 ஆண்டுகாலமாக தன் மகளுக்காக தவ வாழ்வு வாழ்ந்து வந்த முத்துவிற்கு தற்போது வயது 57.டீக்கடை முதல் பரோட்டா கடை வரை வேலை பார்த்த அவர் கஷ்டப்பட்டு தன் மகளின் திருமணத்தை நடத்தினார்.
முத்துவின் வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எனது திருமண வாழ்க்கை தான் 15 நாட்களில் முடிந்துவிட்டது. ஆனால் என் மகள் என்ற உறவுக்காகவும், இந்த சமூகத்தில் தன் சுயமரியாதைக்காகவும் தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டேன். ஆணாக மாறியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கணவரின் இறப்பு சான்றிதழ் வாங்காத நிலையில், ஆதார் அட்டையில் முத்து என்ற பெயரே உள்ளது. அதனால் விதவை நிதி உதவி, முதியோர் ஓய்வூதியத் தொகை என எதுவும் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தால், முதுமையில் உதவியாக இருக்கும்” என்றார் பேச்சியம்மாள்.
முத்து குறித்து அவரது மகள் சண்முகசுந்தரி கூறுகையில், “எனக்கு 36 வயதாகிறது, இதுவரை எனக்கு அப்பா நினைவு வரக்கூடாது என்பதற்காகவும், ஒரு சமூகத்தில் பெண் என்பதால் வேறு எந்த பிரச்சனையையும் நானும், என் அம்மாவும் சந்திக்கக் கூடாது என்பதற்காக தான் ஆணாக மாறினார். அவர் அப்படி மாறியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அவருக்கு வர வேண்டிய முதியோர் ஓய்வூதியத் தொகை வருவதற்கு அரசு எதாவது நடவடிக்கை எடுத்தால் எனக்கு மகிழச்சியாக இருக்கும்” என்று கூறினார்.
இந்த சமூகத்தில் கைம்பெண்ணாக வாழ்வது என்பதே சில இடங்களில் சிக்கலாக இருக்கும் சூழலில், தன் மகளையும் வைத்துக் கொண்டு இந்த சமூகத்தோடு 30 ஆண்டுகாலமாக போராடி வந்துள்ளார் முத்து. ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? , தன் குழந்தையை வளர்த்தெடுப்பதற்காக தன் ஆசை, விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் துறந்து இருந்த தவம் தான் நம் மனதை உருக வைக்கிறது.