கேரள மாநிலத்தில், சில நாட்களுக்கு முன்பு உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்டதில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடை செய்தது. ஏன் என்றால் தற்போது இளைஞர்களின் விருப்பமான உணவாக ஷவர்மா உள்ளது. இந்நிலையில், ஷவர்மா சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்துள்ளது அந்த உணவு மீது அச்சத்தை ஏற்படவைத்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஷவர்மா உணவு தயாராகும் உணவகங்களில் சோதனை செய்து, கெட்டுபோன இறைச்சிகளைப் பயன்படுத்தக்கூடாது என ஆலோசனை வழங்கி வருகின்றனர். மேலும், உணவகத்தில் இருந்த கெட்டுபோன இறைச்சிகளைப் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் ஷவர்மா தயாரிப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சரியாக வேகாத ஷவர்மாவை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், “ஷவர்மாவை வேகவைப்பதற்கு 25 நிமிஷத்தில் இருந்து 45 நிமிஷம் வரை ஆகும். ஒருமுறை ஷவர்மாவை கட் பண்ணி எடுத்தால் அடுத்த ஷவர்மாவுக்கு தேவையை இறைச்சியை பயன்படுத்த மீண்டும் 25 நிமிடத்திலிருந்து 45 நிமிடம் வரை தேவைப்படும்.
இதனால், கடைகளில் அதிக கூட்டம் இருக்கும்போது சரியாக வேகாத ஷவர்மா கொடுக்கப்படுகிறது. பச்சையாக இருக்கும் இறைச்சியில் சில வைரஸ்கள் இருக்கும். இப்படிச் சரியாக வேகாத இறைச்சியைச் சாப்பிட்டால் நமக்கு முதலில் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும். சில நேரத்தில் தீடீரென உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதனால் சரியாக வேகாத இறைச்சி உணவுகளை நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இப்படிச் சரியாக உணவைத் தயாரிக்காமல் கொடுத்தால் கடை உரிமையாளர் மீது 7 வருடம் சிறைத் தண்டனை கொடுக்கும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் இடம் உள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.