தமிழ்நாடு

“எனக்கே தலைவர் கலைஞர், அவர் பெயரை நீ சொல்லலாமா’ என்று இறக்கிவிட்டவர் எம்.ஜி.ஆர்”: நினைவுகூர்ந்த முதல்வர்!

"அவதூறு செய்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நல்லது செய்வதற்கே எனக்கு நேரம் போதவில்லை. கெட்டதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை." என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“எனக்கே தலைவர் கலைஞர், அவர் பெயரை நீ சொல்லலாமா’ என்று இறக்கிவிட்டவர் எம்.ஜி.ஆர்”: நினைவுகூர்ந்த முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“5 ஆண்டுகளில் செய்யவேண்டியதை ஓராண்டில் செய்து முடித்திருக்கிறது தி.மு.க அரசு. வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல்!” தேனி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

“தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த இயற்கை சூழ்ந்த இந்த எழில் மிகுந்த தேனி மாவட்டத்துக்கு நான் வருகை தந்திருக்கிறேன். நான் முதலமைச்சராக பொறுப்பேற்று வருகிற 7-ஆம் தேதி ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. ஏறக்குறைய இரண்டாண்டு காலம் கொரோனா தொற்று இருந்த காரணத்தால், உடனடியாக பல மாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலைக்கு நான் ஆளாக்கப்பட்டேன்.

இருந்தாலும் இன்றைக்கு முதலமைச்சராக பொறுப்பேற்று முதல் முதலாக இந்த தேனி மாவட்டத்தில் ஒரு சுற்றுப்பயணத்தை நடத்தக்கூடிய, அரசு விழாவில் பங்கேற்கக்கூடிய ஒரு சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேனி மாவட்டம் என்பது தலைசிறந்த மாவட்டம்.

  • அணை என்றால் மாபெரும் அணையான வைகை அணை.

  • மலை என்றால் மேகமலை, வெள்ளிமலை, போடிமெட்டு.

  • அருவிகள் என்றால் கும்பக்கரை அருவி, சுருளி அருவி.

  • கலை என்றால் கண்ணகி கோவில்.

இப்படிப்பட்ட வரலாற்றிலே இடம்பெற்றிருக்கக்கூடிய பெருமைக்குரிய மாவட்டமான இந்த தேனி மாவட்டத்தில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

நம்முடைய கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள் இங்கே பேசுகிற போது கூறிப்பிட்டு சொன்னார், இந்த தேனி மாவட்டம் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மாவட்டம் என்பதை அவர் நினைவுபடுத்தி எடுத்துச் சொன்னார், ஆம். 1996-ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்தார்கள்.

1.1.1997 முதல் தேனி மாவட்டம் செயல்படத் தொடங்கியது.

  • 1989-ஆம் ஆண்டு பெரியகுளம் அருகே அரசு தோட்டக்கலைக் கல்லூரியை அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்தான் தொடங்கி வைத்தார்.

  • 2001-ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்தான் திறந்து வைத்தார்.

  • தேனியில் 1999-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உழவர் சந்தையை முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்தான் தொடங்கி வைத்தார்.

  • பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் 50 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 2001-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அது கட்டி முடிக்கப்பட்டது.

  • உத்தமபாளையம் மற்றும் தேவாரம் பகுதி உழவர்களின் கோரிக்கையான பி.டி.ஆர் கால்வாய் திட்டம் மற்றும் 18-ஆம் கால்வாய் திட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு தொடங்கி வைத்தார்.

  • தேனி மாவட்ட மக்களின் நூற்றாண்டு கனவுத்திட்டம்தான் 18-ஆம் கால்வாய் திட்டம்.

“எனக்கே தலைவர் கலைஞர், அவர் பெயரை நீ சொல்லலாமா’ என்று இறக்கிவிட்டவர் எம்.ஜி.ஆர்”: நினைவுகூர்ந்த முதல்வர்!

1999-ஆம் ஆண்டு 22.50 கோடி ரூபாயில் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டு 2008-ஆம் ஆண்டு அது நிறைவு பெற்று இன்று மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் அமைந்திருக்கக்கூடிய திட்டம் இந்தத் திட்டம்.

  • தேனியில் இருக்கக்கூடிய புதிய பேருந்து நிலையத்துக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அன்றைக்குத் துணை முதலமைச்சராக இருந்த நான் வருகை தந்து அடிக்கல் நாட்டினேன் என்பதையும் நான் மறந்து விடவில்லை.

  • திராட்சை அதிகம் விளையும் பகுதியான சின்னமனூர் பக்கத்தில் இருக்கிற ஒத்தப்பட்டி பகுதியில், தனியார் திராட்சைத் தொழிற்சாலையையும் அன்றைக்கு நான் தொடங்கி வைத்தேன்.

இப்படி இந்த மாவட்டத்துக்கு ஏராளமான பணிகள், ஏராளமான திட்டங்கள், எண்ண முடியாத சாதனைகள் அன்றைக்கு செய்த ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி என்பதை நான் பெருமையோடு எடுத்துச் சொல்லி,

அந்த வரிசையில் தான் இப்போது மீண்டும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 6-வது முறையாக பொறுப்பேற்று தமிழ்நாடு முழுமையும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த தேனி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பதற்காக இன்றைக்கு நான் வந்திருக்கிறேன்.

இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக கூட்டுறவுத் துறை அமைச்சர்ஐ.பெரியசாமி அவர்கள் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர், திண்டுக்கல் ஐ.பெரியசாமி என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் இப்போது திண்டுக்கல் ஐ.பெரியசாமி மட்டுமல்ல, தேனி ஐ.பெரியசாமி என்று சொல்லக்கூடிய நிலைக்கு அவர் தன்னுடைய பணியை அவர் இங்கே ஆற்றிக் கொண்டிருக்கிறார். பல்வேறு நலத்திட்டப் பணிகளை, பல உதவிகளை இங்கு இருக்கக்கூடிய மாவட்ட நிர்வாகத்தோடு அவர் தொடர்பு கொண்டு அந்தப் பணிகளையெல்லாம் மிகச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தேனீயைப் போல சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர், துடிப்போடு செயல்படக்கூடியவர். எனவே அவருக்கும், இந்த தேனி மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், நம்முடைய அரசின் சார்பில் வாழ்த்துகளை, பாராட்டுக்களை நன்றியுணர்வோடு தெரிவித்துக்கொள்ள நான் விரும்புகிறேன்.

பல்வேறு நலத்திட்ட உதவிகள் இங்கு தரப்பட்டிருக்கிறது.

  • சாலை விபத்து நிவாரண நிதி

  • முதலமைச்சரின் பொதுநிவாரண நிதி

  • நலிந்தோர் உதவித்தொகை

  • வீட்டுமனைப்பட்டா

  • இணையவழி இ-பட்டா

  • பெரியார் நினைவு சமத்துவபுரம் பராமரிப்பு

  • பிரதமர் குடியிருப்புத்திட்டம்

  • பழங்குடியினர் வீடு வழங்கும் திட்டம்

  • ஆட்டுக்கொட்டகை அமைக்க உதவித்தொகை

  • நமக்கு நாமே திட்டம்

  • புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தில் கருணை அடிப்படையில் வேலை

  • வங்கிக் கடன்கள்

  • வாழ்ந்துகாட்டுவோம் திட்ட சுழல் நிதி

  • வேளாண் இயந்திரங்கள் வழங்குதல்

  • ஆதரவற்ற பெண்களுக்கு ஆடுகள் வழங்குதல்

  • பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட நிதி உதவி

  • திருநங்கையர்க்கு அடையாள அட்டை வழங்குதல்

  • புதிய மின்னணு குடும்ப அட்டை

  • சலவை பெட்டிகள் வழங்குதல்

  • இஸ்லாமிய மகளிர்க்கு சங்க உதவி நிதி

  • கிறித்துவ மகளிர் சங்க உதவி நிதி

  • முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்கூட்டர்

  • சுய வேலைவாய்ப்புத் திட்டம்

  • கலைமன்ற விருதுகள்

  • புழு வளர்ப்பு மனை மானியம்

  • கல்வி உதவித் தொகைகள்

  • பயிர்க்கடன்கள்

- இப்படி பல்வேறு தலைப்புகளில் பல்வேறு உதவிகள்.

“எனக்கே தலைவர் கலைஞர், அவர் பெயரை நீ சொல்லலாமா’ என்று இறக்கிவிட்டவர் எம்.ஜி.ஆர்”: நினைவுகூர்ந்த முதல்வர்!

அதாவது 71 கோடி கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட உதவிகளை 10,427 பேருக்கு இன்றைக்கு வழங்கியிருக்கிறோம். ஒருசேர விழா மூலமாக பல துறைகளின் சார்பில்லான 50-க்கும் மேற்பட்ட திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் ஒரு நல்ல ஆட்சியினுடைய இலக்கணம். இதுதான் மக்களுக்கான அரசு.

இதைத்தான் நாம் இன்றைக்கு எப்படி பெருமையோடு சொல்கிறோமென்றால், இது திராவிட மாடல் அரசு என்று நாம் பெருமையோடு பேசிக் கொண்டிருக்கிறோம். வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல், அதுதான் என்னுடைய மாடல், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய மாடல். இதுதான் திராவிட மாடல்.

அரசாங்கத்தின் அனைத்துத் திட்ட உதவிகளும் அனைவரையும் சென்று சேரும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். கழக ஆட்சியில் அனைத்துத் திட்டங்களும் தொய்வு இல்லாமல் நடக்க வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவுரை மட்டுமல்ல, ஆலோசனைகள் மட்டுமல்ல, ஆணையும் வழங்கிக் கொண்டிருக்கிறேன்.

அதேபோல, ஒவ்வொரு தனிமனிதனின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய இலக்கு. அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் நம்முடைய திராவிட மாடல் என்று நாம் சொல்வோம்.

இன்றைக்கு 10,427 பேர் அரசு உதவிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், இதன் மூலமாக, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பயனடைகிறார்கள். உங்கள் முகத்தில் காணக்கூடிய மகிழ்ச்சிதான் என்னை ஒவ்வொரு நாளும் சோர்வில்லாமல் உழைக்கக்கூடிய அந்த உத்வேகத்தை, ஊக்கத்தை எனக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்வார், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண வேண்டும் என்று, அதுதான் எனக்கு நினைவிற்கு வருகிறது. அந்த வகையில் நீங்கள் இன்று நலத்திட்ட உதவிகளைப் பெற்று மகிழ்ச்சி அடையும்போது உங்களுடைய புன்சிரிப்பிலே தான் பேரறிஞர் அண்ணா சொன்ன அந்த தாரக மந்திரத்தை நான் காண்கிறேன்.

கழக ஆட்சி பொறுப்பேற்று இன்னும் ஓராண்டு கூட முடியவில்லை, வருகிற 7ஆம் தேதி தான் ஓராண்டு முடிவடைகிறது, அதற்கு இன்னும் ஒருவார காலம் இருக்கிறது. இந்த ஓராண்டு காலத்தில் ஐந்து வருடம் ஆட்சியில் இருந்தால், ஏன், 10 வருடம் ஆட்சியில் இருந்தால் என்னென்ன செய்திருப்போமோ அதையெல்லாம் இந்த ஒரே ஆண்டிலே நம்முடைய அரசு அந்த சாதனையை செய்திருக்கிறது. இது என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.

  • கொரோனா என்ற அந்த கொடிய நோய்க்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.

  • தடுப்பூசி செலுத்துவதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாகவே மாற்றினோம். இதுவரை தமிழ்நாட்டில் 91 விழுக்காடு பேருக்கு முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

  • மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது.

  • இங்கே சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுச் சொன்னதைப்போல, கொரோனா காலத்தில் நிவாரண நிதியாக நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து 4000 ரூபாய், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.

  • கொரோனா கால நிவாரணமாக 13 வகையான மளிகைப் பொருள்கள் தரப்பட்டது.

  • பொங்கல் பரிசாக 22 மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.

  • ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது.

  • ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் யாரும் குறைப்பதற்கு முன்பாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தோம்.

  • இலங்கையில் இருக்கக்கூடிய நம்முடைய தமிழர்கள் அடைக்கலம் தேடி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கக்கூடிய அந்த இலங்கைத் தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • அது மட்டுமல்ல, நெசவாளர் கோரிக்கையான பஞ்சுக்கு ஒரு விழுக்காடு வரி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

  • அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

  • கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் தள்ளுபடி, 14 லட்சம் பேரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

  • மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் முழுமையும் தள்ளுபடி செய்திருக்கிறோம்.

  • அதைத் தாண்டி, இப்போது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

  • கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

  • கொரோனாவால் பள்ளி இடைநின்ற குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கார்கள். பொதுமுடக்கக் கால கற்றல் இழப்பைச் சரிசெய்ய 'இல்லம் தேடி கல்வி' என்ற சிறப்பான திட்டம்.

  • மருத்துவச் சேவையை மக்களின் இல்லத்திற்கே கொண்டு சேர்க்கும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற ஒரு உன்னதமான திட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

  • சாலை விபத்துகளில் சிக்கக்கூடிய, பாதிக்கக்கூடிய விலை மதிப்பற்ற அந்த உயிர்களைக் காப்பாற்ற - இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 என்ற உன்னதத் திட்டம்.

  • காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி தொகுப்பு 61 கோடி ரூபாய்க்கு வழங்கியதால் உழவர்கள் பெருமகிழ்ச்சி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

  • மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்னால் கால்வாய்களை முன்கூட்டியே தூர் வாரினோம். 4.9 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்து இன்றைக்கு வரலாற்றுச் சாதனையை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம்.

  • தமிழ்நாட்டு இளைஞர்களைப் பொறுத்தவரை, அவர்களை கல்வியில் சிறந்தவர்களாக ஆக்குவதற்காக 'நான் முதல்வன்' என்ற ஒரு உன்னதமான திட்டத்தை இன்றைக்கு நாம் தொடங்கி இருக்கிறோம்.

  • இந்தப் பத்து மாத காலத்தில் 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 133 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, இதன் மூலமாக
    2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை நாம் இன்றைக்கு உருவாக்கியிருக்கிறோம்.

  • மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 279 கோடி ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

  • உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது.

  • இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு - 2,567 கோடி ரூபாய் திருக்கோயில் நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

  • மூலலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவிகளின் மேல்படிப்புக்காக மாதம் 1000 ரூபாய் அவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் 6 இலட்சம் மாணவிகள் பயனடைய இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவிகள் பட்டம் பெற்றவர்களாக உயர வேண்டும். அதற்கு இந்தத் திட்டம் உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்ணும் பட்டதாரியாக வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய லட்சியம். அதற்காகத்தான் திராவிட இயக்கம் பல ஆண்டுகாலமாக போராடி வருகிறது. போராடிய லட்சியங்களை அடையத்தான் நாம் சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். பெண்கள் கல்வியைக் கற்றுக் கொண்டாலே “பழமை லோகம் இடியுது, தூள்தூளாகும்”. அந்த பயத்தில்தான் கல்வி கற்க பல தடைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அத்தனை தடைகளையும் நாம் தகர்த்தெறிவோம்.

நம்முடைய கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதில் பெரும்பாலான திட்டங்களை, நாங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. இன்னும் 5 சதவீதம், 10 சதவீதம் இருக்கிறது, நான் இல்லை என்று மறுக்கவில்லை. அதையும் நிச்சயமாக, உறுதியாக, படிப்படியாக இந்த ஸ்டாலின் நிறைவேற்றிக் காட்டுவான் என்பதை நான் மீண்டும் உறுதியோடு தெரிவிக்க விரும்புகிறேன்.

“எனக்கே தலைவர் கலைஞர், அவர் பெயரை நீ சொல்லலாமா’ என்று இறக்கிவிட்டவர் எம்.ஜி.ஆர்”: நினைவுகூர்ந்த முதல்வர்!

இவ்வளவு நேரம் நாங்கள் செய்த சாதனைகளை உங்களிடத்தில் சொன்னோம். இப்போது என்ன சொல்லப் போகிறேன் என்று சொன்னால், இனி இந்த தேனி மாவட்டத்திற்கு செய்யப்படக்கூடிய வளர்ச்சிப் பணிகளைப் பற்றி, திட்டங்களைப் பற்றி இப்போது நான் சொல்லப் போகிறேன்.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனை 8 கோடி ரூபாய் செலவிலும், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை 4 கோடி ரூபாய் செலவிலும் மேம்படுத்தப்படும்.

போடிநாயக்கனூர் வட்டம், மஞ்சநாயக்கன்பட்டி அருகில் கொட்டக்குடி ஆற்றின் அருகே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும்.

ஆண்டிப்பட்டியிலுள்ள வைகை உயர் தொழில்நுட்ப விசைத்தறி பூங்காவைத் தொடர்ந்து சிறப்புற செயல்படச் செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு அதுவும் செயல்படுத்தப்படும்.

இங்கே கம்பம் ராமகிருஷ்ணன் அவர்கள் பல கோரிக்கை எடுத்து வைத்திருக்கிறார், அதில் முக்கியமான ஒரு கோரிக்கை, தேனி மாவட்டத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தியாவதைக் கருத்தில் கொண்டு, வேளாண் பெருமக்களுக்கு உதவக்கூடிய வகையில் நவீன அரிசி ஆலை உருவாக்கப்படும் என்ற அந்த உறுதியை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

வீரநாயக்கன்பட்டியில் உள்ள குறவர்கள் காலனி திட்டப் பகுதியில், நரிக்குறவர் மற்றும் குறவர்களுக்காக குடியிருப்பு கட்டப்படும். 175 குடியிருப்புகளுக்கான பயனாளிகளின் பங்களிப்புத் தொகை 3.5 கோடி ரூபாயை முதற்கண் அரசு அளித்திருக்கிறது. பின்பு எளிதான சிறு தவணைகளில் அவர்கள் திருப்பிச் செலுத்திட வழிவகை செய்யப்படும்.

அதிக அளவில் பயணியர் வந்துசெல்லக்கூடிய குமளி பேருந்து நிலையம் 7.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

என்னைப் பொறுத்தவரையில் - என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற அந்த வழித்தடத்தில் பயணிக்க நினைக்கிறவன் நான். மக்களுக்கு பணியாற்றும்போது - மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்தில் சொல்லப்படும் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ள எப்போதும் இந்த அரசும், நானும் தயாராக இருக்கிறோம்.

அவதூறு செய்யும் நோக்கத்தோடு - உள்நோக்கத்தோடு செய்யப்படும் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அதற்கு பதில் சொல்லி நேரத்தைச் செலவிடுவதை விட, நல்லது செய்வதற்கே எனக்கு இப்போது நேரம் கிடைக்கவில்லை, அதனால் கெட்டதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால்- சென்னையில் சட்டமன்றம் - அதற்குப் பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம சபை, அதைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற எதிர்பாராத விபத்து - அங்கே நான் சென்று வந்தேன். மறைந்த
11 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, காயம்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி நிவாரணத் தொகையை வழங்கிவிட்டு வந்தேன் - மீண்டும் சட்டமன்றம், அதை முடித்துவிட்டு இப்போது தேனி வந்திருக்கிறேன்.

இது முடித்துவிட்டு, மாலையில் திண்டுக்கல் செல்கிறேன். இதேபோன்று, அங்கு ஒரு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். அதை முடித்துவிட்டு, இரவோடு இரவாக, நான் சென்னைக்கு செல்ல வேண்டும். அதற்குப் பிறகு மே தின நாள். அதற்குப் பிறகு அன்று மாலையே நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் 75ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

'கடிகாரம் ஓடும் முன் ஓடு' என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ஒரு பாடல் எழுதினார். அப்படித்தான் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

“எனக்கே தலைவர் கலைஞர், அவர் பெயரை நீ சொல்லலாமா’ என்று இறக்கிவிட்டவர் எம்.ஜி.ஆர்”: நினைவுகூர்ந்த முதல்வர்!

நம்முடைய தலைவர் கலைஞரிடத்தில் ஒரு பத்திரிகை நிருபர் ஒரு கேள்வியைக் கேட்டார், உங்கள் மகன் ஸ்டாலினைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள் என்று, கலைஞர் சொன்னார், 'ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு' என்று சொன்னார். அந்த உழைப்பைக் கற்றுக் கொடுத்தவரே அவர்தான். அப்படி உழைப்பதற்கு எனக்கு ஊக்கம் கொடுத்தவரே அவர்தான்.

எனக்கு மட்டும் இல்ல, தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அதுதான் வழிகாட்டியாக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார். ஆக, அவருடைய பிறந்தநாளான ஜுன் 3ஆம் தேதியை அரசு விழாவாக நடத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் அறிவித்து, எல்லா கட்சித் தலைவர்களும் அதை வரவேற்று, அதை நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள். ஆக, ஒரு தந்தையினுடைய பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று அறிவிக்கிற வாய்ப்பு அவருக்கு மகனாக இருக்கக்கூடிய இந்த ஸ்டாலினுக்கு கிடைத்திருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

பி.ஜே.பி கூட ஆதரித்தது, எல்லா கட்சிகளும் ஆதரித்தார்கள். ஆதரிக்காத கட்சி யார் என்று இந்த மேடையில் நான் சொல்ல விரும்பவில்லை. இந்த மேடையை நான் அரசியலாக்க விரும்பவில்லை.

கருணாநிதி என்று நம் தலைவர் முத்தமிழறிஞரின் பெயரைக் குறிப்பிட்டு, தலைவர் பெயரை கருணாநிதி என்று பெயரை சொன்ன காரணத்தால், அவருடன் காரிலே வந்த ஒருவரை இறக்கிவிட்டவர் யார் என்றால், முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள். எனக்கே தலைவர் 'கலைஞர் தான், அவர் பெயரை நீ சொல்லலாமா என்று இறக்கி விட்டவர் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள். அப்படிப்பட்ட நாகரீகத்தை இன்றைக்கு இருக்கக்கூடியவர்களிடத்தில் எதிர்பார்ப்பது என்னுடைய தவறுதான். ஆனால் இதன் மூலமாக மக்களிடம் தாங்கள் யார் என்பதை அவர்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்லதோர் நாட்டை மட்டுமல்ல - நல்லதோர் நாகரீகமான அரசியலையும் உருவாக்க நாம் நினைக்கிறோம். அதற்குத் தேவை தொலைநோக்குப் பார்வையும் நல்லெண்ணமும் தான்.

எனது தொலைநோக்குப் பார்வை என்பது அனைத்திலும் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரை நாம் பெற வேண்டும். அனைத்திலும் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு என்னை நான் ஒப்படைத்து செயல்படுவேன். அப்படி ஒப்படைத்து செயல்படுகிறபோது என்னோடு அமைச்சர் பெருமக்கள் மட்டுமல்ல, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மட்டுமல்ல, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மட்டுமல்ல, மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் எனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொண்டு,

இந்த சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு மீண்டும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து, இங்கு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக வந்திருக்கும் பயனாளி பெருமக்களுக்கும் என் வாழ்த்துகளை, பாராட்டுக்களை தெரிவித்து, இந்த சிறப்பான நிகழ்ச்சியை எழுச்சியோடு நடத்தி தந்திருக்கக்கூடிய மாவட்டத்தின் நிர்வாகத்திற்கும், அரசு அலுவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் குறிப்பாக இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கும், இங்கு வந்திருக்கக்கூடிய அமைச்சர் அவர்களுக்கும், நம்முடைய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories