தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் எதிர்பாரத விதமாக உரசியதில் தேரின் மீது மின்சாரம் தாக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் இரண்டு 2 சிறுவர்கள் அடக்கம், மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தேரின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தேர்த்திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர் என்ற துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் 15 நபர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளதாக அறிகிறேன், அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஐந்து இலட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்படி சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து முதலமைச்சர் தஞ்சை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.