வட தமிழ்நாடு மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை முதல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு. இயல்பை விட 2 - 3℃ அதிகரிக்கவும், அதிகபட்சம் 40℃ எட்டுவதற்கும் வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
நடப்பு ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே மார்ச் மாதத்தில் வெப்பநிலை 40℃ எட்டியது. தமிழ்நாட்டில் பல இடங்களில் காற்றின் ஈரப்பதம் காரணமாக வெப்பம் குறைவாக இருந்தாலும் அதன் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது.
இந்த மாதமும் வெப்பநிலை இயல்பை விட 1℃ முதல் 2℃ வரை அதிகரித்து வரும் வேளையில் தென் தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் சில உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதால் வெப்பநிலை அதிகமாக உணரப்படவில்லை.
ஆனால் மழை பொழிவு இல்லாத மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகி வருகிறது. இந்த நிலையில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக வரும் வெள்ளிக்கிழமை முதல், தமிழ்நாடு நிலப்பரப்பில் உள்ள வட மாவட்ட பகுதிகளில் தரைக்காற்று மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும்.
இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ரணிப்பேட்டை, திருப்பத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 3℃ வரை கூடுதலாக பதிவாக கூடும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 40℃ வரை பதிவாகக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து கோடை வெப்பம் தொடர்ந்து அதிகளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் தகவல்.