தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன். இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பங்கேற்று பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். மேலும் கடந்த ஜனவரியில் நடந்த தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் 19 வயது பிரிவில் சாம்பியன் பட்டமும் வென்று சாதனை படைத்துள்ளார் விஸ்வா தீனதயாளன்.
சென்னையில் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்த விஸ்வா தீனதயாளன் ஷில்லாங்கில் இன்று தொடங்கும் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக மேகாலயா தலைநகர் கௌஹாத்தியில் இருந்து சக போட்டியாளர்களுடன் காரில் சென்றுள்ளார்.
அப்போது, கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் சென்று இருந்த கார் மீது எதிரே வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது. இதில் விஸ்வா தீனதயாளன் பயணித்த கார் பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டது. விஸ்வா தீனதயாளன் உடன் ஓட்டுநரும் உயிரிழந்தார்.
காரில் இருந்த மற்ற தமிழக வீரர்கள் ந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன், கிஷோர் குமார் ஆகியோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீனதயாளனின் உடல் இன்று காலை சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது.
ஏப்ரல் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் விஸ்வா தீனதயாளன் பங்கேற்க இருந்த நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவு சக டேபிள் டென்னிஸ் வீரர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தமிழ்நாட்டின் நம்பிக்கைக்குரிய இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் விபத்தில் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒரு சாதனையாளராக உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் விஷ்வா தீனதயாளன் விரைவாக நம்மை விட்டு சென்றது வேதனை அளிக்கிறது. இதை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.