தமிழ்நாடு

நகைக்கடை சுவரில் துளையிட்டு 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை.. உடனடியாக வலைவீசி கொத்தாக தூக்கிய போலிஸ்!

நகைக்கடை சுவரில் துளையிட்டு 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த சிறுவர் உட்பட 4 பேரை நான்கு மணி நேரத்தில் போலிஸார் கைது செய்தனர்.

நகைக்கடை சுவரில் துளையிட்டு 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை.. உடனடியாக வலைவீசி கொத்தாக தூக்கிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தூத்துக்குடியில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த இளஞ்சிறார் உட்பட 4 பேரை நான்கு மணி நேரத்தில் போலிஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி சாந்திநகர் சேர்ந்தவர் முருகன் (60). இவர் சிதம்பர நகரில் நகைக்கடை நடத்தி வருகிறார். அதே கடையில் தங்கநகைகள், வெள்ளிப்பொருட்கள் செய்து கொடுக்கும் பட்டறையும் வைத்துள்ளார். நேற்று இரவு முருகன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார்.

இன்று காலையில் கடையை திறந்து உள்ளே சென்றபோது, அங்கிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. கடையில் ரேக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 3கிலோ வெள்ளிப்பொருட்கள், 2½ பவுன் ஐம்பொன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, நகைக்கடையின் பக்கவாட்டில் உள்ள சிறிய சந்து பகுதியில் இருந்து கடையின் சுவரில் ஒரு ஆள் நுழையும் வகையில் துளையிடப்பட்டு இருந்தது. அந்த வழியாக கடையில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த வெள்ளிப்பொருட்களை கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலிஸார் ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வு செய்து பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக எஸ்.பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடினர். சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தூத்துக்குடி முனியசாமிபுரம் லோகியா நகரைச் சேர்ந்த முனியசாமி என்ற குட்டி (20), பிரையண்ட் நகரை சேர்ந்த சதீஷ் என்ற மோகன் (20), லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த சுடலையாண்டி (29), மற்றும் இளஞ்சிறார் உட்பட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர்.

கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் விரைந்து கைது செய்த போலிஸாரை மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டினார். காவல்துறையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையும் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்ட சுமார் நான்கு மணி நேரத்தில் இந்த கொள்ளை சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார். துரிதமாக செயல்பட்டு வெள்ளி நகைகளை மீட்டு தந்த காவல்துறைக்கு நகைக்கடை உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories