சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சியின் 8 வார்டு தி.மு.க. கவுன்சிலர் புஷ்பவதி. இவர் அதே பகுதியில் தனது கணவருடன் இணைந்து பல ஆண்டுகளாக தள்ளுவண்டியில் வைத்து உணவகம் ஒன்றினை நடத்தி வருகிறார்.
கவுன்சிலராக வெற்றி பெற்ற பிறகும் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தும் தொழிலை கைவிடாது, தனது வார்டு மக்களின் நிறை குறைகளையும் கேட்டறிந்து குறைகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார் புஷ்பாவதி. இதன் மூலம் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் புஷ்பாவதி.
மோட்டார் சைக்கிளில் சென்று மக்களை சந்தித்து அவர்களுக்கான தேவையை நிறைவேற்றும் புஷ்பாவதி, தான் நடத்தும் தள்ளுவண்டி உணவகத்தின் மூலம் மக்களின் ஆரோக்கியத்தை பேணி காக்கும் வகையிலேயே உணவுகளை தயாரித்து விநியோகம் செய்து வருகிறார்.
அவரது இந்த அயராது உழைப்புக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக BBC தமிழ் செய்தித்தளம், நரசிங்கபுர நகராட்சி தி.மு.க. கவுன்சிலர் புஷ்பாவதியிடம் பேட்டியெடுத்து வெளியிட்டுள்ளது.
அந்த செய்தித் தொகுப்பை பகிர்ந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புஷ்பாவதிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதில், “மக்களோடு மக்களாகப் பணியாற்றுங்கள் என உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் அறிவுறுத்தியிருந்தேன். கழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ள புஷ்பாவதி அவர்களின் பொதுப் பணிக்கு எனது பாராட்டுகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்