வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி குப்பு. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலுவும், அவரது மகன் ஒருவரும் உயிரிழந்து விட்டனர்.
இதையடுத்து குப்புவும், இவரது மகன்கள் தினேஷ், சுதாகர் ஆகியோர் சாலையோரத்தில் தங்கி வருகின்றனர். மேலும் இவர்கள் சாலைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தினேஷுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று தினேஷ் பரிதபாகமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மகனின் உடலை அடக்கம் செய்வதுற்கு தாய் குப்புவிடம் பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதனை அறிந்த 'மஜித்தே சேவை' என்ற இஸ்லாமிய தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தினேஷின் உடலை அடக்கம் செய்ய முன்வந்துள்ளனர்.
பின்னர் இந்து முறைப்படி தினேஷின் உடலை, இஸ்லாமிய அமைப்பினர் அடக்கம் செய்துள்ளனர். சமத்துவத்தை எடுத்துறைக்கும் விதமாக அமைந்துள்ள இந்த சம்பவம் அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எப்படியாவது இந்து, இஸ்லாமியர் மனதில் வெறுப்பை திணித்துவிட வேண்டும் என்பவர்களுக்கு, 'தமிழ்நாட்டில் ஒருபோதும் வெறுப்பு அரசியலுக்கு இடம் இல்லை' என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தும் நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது.