சென்னை முகப்பேரி கிழக்கு ஜெ.ஜெ.நகரில் வசித்து வரும் அன்பு செல்வம் (29), விருகம்பாக்கம் சாலிகிராமம் பக்தியில் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
அந்த விடுதியில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், அன்பு செல்வத்திடம் தான் போலிஸில் எஸ்.ஐ எனக் கூறி அடையாள அட்டையை காட்டு விடுதி மீது வழக்கு பதியாமல் இருக்க மாதாமாதம் 30,000 ரூபாய் தர வேண்டும் எனக் கூறி மிரட்டியிருக்கிறார்.
அதே மீண்டும் நேற்று (ஏப்.,14) வந்து அன்பு செல்வத்தின் சட்டைப்பையில் இருந்த 500 ரூபாயை பறித்ததோடு, தான் கேட்ட பணத்தை அருகில் உள்ள இடத்திற்கு கொண்டு வந்து தருமாறு கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
இதனையடுத்து சந்தேகமடைந்த அன்புசெல்வம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடந்தவை பற்றி புகார் தெரிவித்திருக்கிறார். உடனடியாக விரைந்து சென்ற போலிஸார் சம்பவ இடத்தில் இருந்த போலி போலிஸை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், பிடிபட்ட நபர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய பிரதாபன் (26) என்பதும் போலியான காவல் உதவி ஆய்வாளர் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு விடுதி மேலாளரிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது.
பின்னர் விஜய பிரதாபனை கைது செய்த போலிஸார் அவரிடமிருந்த 400 ரூபாயையும், போலி அடையாள அட்டை, ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஏற்கெனவே கடலூரில் பணமோசடி செய்தது தொடர்பாக விஜய பிரதாபன் மீது வழக்கு இருப்பது தெரிய வந்தது.
விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவுப்படி விஜய பிரதாபனை நேற்றே சிறையில் அடைத்திருக்கிறார்கள்.