மத்தியில் ஆட்சி செய்யும் ஒன்றிய பா.ஜ.க அரசு, ஆட்சி பொறுப்பிற்கு வந்ததில் இருந்தே இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியைக் கட்டாயப்படுத்தி திணிக்கும் முயற்சியை தொடர்ச்சியாக கையாண்டு வருகிறது. அரசுப்பணிகளுக்கு நடக்கும் தேர்வுகள் தொடங்கி, அறிவிப்புகள் வரை இந்தியிலேயே வெளியிடும் போக்கை மேற்கொண்டு வருகிறது.
அதேவேளையில், ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் பலரும் மொழி மீதான தங்களின் காழ்ப்புணர்வை அவ்வபோது பேசி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும். இந்தியை, ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக கொண்டு வரும் தருணம் வந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஒன்றிய அமைச்சரின் இந்த கருத்துக்கு, இந்தி பேசாத மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் சித்திரை திருநாளுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான் என பேசிதால் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பிரதமரின் வாழ்த்து செய்தியில் இந்தி மொழி இடம் பெறாதது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அமித்ஷாவின் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பால் பிரதமர் மோடி இந்தியை தவிர்த்திருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரான டி.ஆர்.பி. ராஜா ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பிரதமருக்கு நன்றி. ஆனாலும் நீங்கள் 3 மாதம் தாமதமாக தெரிவித்துள்ளீர்கள்" என தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரை முதல் நாளா ? என்ற ஒரு விவாதம் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. தமிழறிஞர்கள், தை 1-ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று வலியுறுத்தி வந்தனர். அதனையடுத்து, 2008ம் ஆண்டு தை 1-ஐ தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க அரசு அறிவித்து அரசாணை பிறப்பித்தது.
மேலும் ஏன் தை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடவேண்டும் என பல்வேறு காரணங்களை தமிழறிஞர்கள் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர். எனவே தை முதல் நாள் தான் தமிழர்களின் புத்தாண்டு என்பதை சுட்டிக்காட்டும் விதமாக, தி.மு.க எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா இத்தகைய கருத்தை நகைச்சுவையாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.