உலகம் முழுவதுமே பெரும்பாலானோர் வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கிவிடுகின்றனர். மக்கள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. முன்னதாக வந்த ப்ளூவேல் வீடியோ கேம் போன்று தற்போது இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது ‘பப்ஜி’ மோகம்.
இவை வெறும் விளையாட்டுகளாக மட்டும் இல்லாமல் பல்வேறு உடல் உபாதைகளையும் ஏற்படுத்திவிடுகின்றன. சில சமயங்களில் உயிரையும் காவு வாங்கும் அளவுக்கு அபாயகரமானதாக உள்ளதாக ‘பப்ஜி’ விளையாட்டை தடை செய்யவேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4 ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்போது மாணவருக்கு மனபிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சையின் போது மாணவர் செய்கைக செல்போனில் வீடியோ கேம்ஸ் விளையாடுவது போல இருந்ததால் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக செல்போனில் கேம்ஸ் விளையாடுவதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.