வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திலகவதி என்ற வழக்கறிஞர் தனது தாயாருடன் சென்னையில் இருந்து வேலூருக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது இவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராகவன் என்ற நபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும், அந்த நபர் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு தவறாக நடக்க முயன்றபோது, தனது சட்டை ஊக்கை வைத்து அந்த நபரின் கையை குத்தியுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த தொல்லை கொடுத்துள்ளார். இதை திலகவதி வீடியோ எடுத்துள்ளார்.
பிறகு போலிஸாருடன் வீடியோ ஆதாரத்துடன், அந்த நபரை பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போலிஸார் ராகவனைக் கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
மேலும் வழக்கறிஞர் நடந்த சம்பவத்தை விளக்கி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "பெண்கள் துணிச்சலுடன் இப்படியான குற்றவாளிகளை கண்டு அஞ்சாமல் அவர்களை எதிர்கொள்ள வேண்டும். நாம் போலிஸாரிடம் புகார் கொடுத்தால்தான் இவர்கள் பயப்படுவார்கள்.
நான் புகார் கொடுத்தவுடனே தமிழ்நாடு போலிஸார் உரிய நேரத்தில் அந்த இரவிலும் வந்து, அந்த குற்றவாளியை பேருந்தில் இருந்து இறக்கி காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். பெண்கள் புகார் கொடுத்தால் அதை எடுத்து விசாரிக்க தமிழ்நாடு போலிஸார் தயாராக இருக்கிறார்கள்." என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலரும் வழக்கறிஞர் திலகவதியின் இந்த துணிச்சல் நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.