யோகா பயிற்சி வகுப்பு நடத்திவந்த யோகா மாஸ்டர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் சந்தானம் (57). இவர் கடந்த 7 ஆண்டுகளாக யோகா பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக யோகா கற்றுத் தருவதாக மாநகராட்சி பள்ளியில் யோகா நடத்தி வந்துள்ளார்.
கடந்த வாரம் வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை 5 நாட்கள் மதியம் உணவு இடைவெளியில் ஒரு மணி நேரம் 10, 11. 12 வகுப்புகளில் உள்ள மாணவிகளுக்கு யோகப் பயிற்சி வகுப்பு நடத்தி வந்தார்.
இந்த நிலையில் யோகா கற்றுத் தருகிறேன் என்று என்ற பெயரில் அங்கிருந்த மாணவிகளிடம் தகாத முறையில் பேசி ஒருசில மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவிகள் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நல வாரிய குழு உறுப்பினர் லலிதாவிடம் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் அவர் விசாரணை செய்து இதுகுறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலிஸில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்த வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரியதர்ஷினி வழக்குப்பதிவு செய்து மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த யோகா மாஸ்டர் சந்தானத்தை கைது செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.