திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜு (21). திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ராஜூவுக்கும் காரைக்காலை சேர்ந்த 17 வயது கல்லூரி சிறுமிக்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பு ரீதியில் பேசியதாக கூறப்பட்டு நாளடைவில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து வாலிபர் அவ்வப்போது காரைக்கால் வந்து கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பின்னர் சொந்த ஊர் திரும்பிய அந்த வாலிபர், மீண்டும் சிறுமியை தொடர்பு கொண்டு பேசி அவரை திருமணம் செய்ய மறுத்ததோடு, மாணவியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறிய ராஜு, சிறுமியிடம் 5,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதை தர மறுத்த சிறுமியை ஆபாசமாக திட்டி கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்ததிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டதை அடுத்து ராஜு தலைமறைவாகியிருக்கிறார். இதையடுத்து ராஜுவின் மொபைல் நம்பரை வைத்து போலிஸார் தேடி வந்தனர். பின்னர் தீவிர தேடுதல் வேட்டையில் வாலிபர் தமிழகம், கர்நாடகம் வழியாக மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
பின்னர் மும்பை நகரத்தின் டிராம்பை பகுதியில் தலைமறைவாகி இருந்த ராஜூவை போலிஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் வாலிபர் ராஜூவை காரைக்காலுக்கு அழைத்து வரப்பட்டு காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி காலாபேட் மத்திய சிறையில் அடைத்தனர்.