ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா மரணத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் இதுவரை 154 சாட்சியங்களை விசாரித்துள்ளது.
பின்னர், இந்த ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து தாமதிக்கப்பட்ட நிலையில், 6 ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலை இருந்துவந்தது. இதற்கிடையே, மருத்துவ நிபுணர்கள் இல்லாத ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்கமுடியாது. ஆணையம் செயல்பட தடைவிதிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. அதற்கு பதிலளித்துள்ள அப்பல்லோ மருத்துவமனை, ஜெயலிலிதாவின் மரணம், வழங்கப்பட்ட சிகிச்சை ஆகியவை குறித்து மருத்துவ நிபுணர்களும் உள்ளடங்கிய குழுவால் மட்டுமே முழு விசாரணை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையிலான 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து அப்பல்லோ மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு தலைசுற்றல், மயக்கம் இருந்ததாகவும் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்திய போது ஓய்வெடுக்க மறுத்துவிட்டார் என்றும் அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வீட்டில் இருந்த சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதனையேற்று இளவரசி இன்று ஆஜராகியுள்ளார். அவரது மகன் விவேக்கும் உடன் வந்துள்ளார்.
அதேபோல் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வமும் இன்று ஆஜராகினார். இதில் ஜெயலலிதா மரண வழக்கு தொடர்பாக 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜாராகத நிலையில், 9வது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட பின் ஆறுமுகசாமி கமிஷன் முன் இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விசாரணையில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் வர காரணம் என்ன? கடைசியாக ஜெயலலிதாவை எப்போது பார்த்தீர்கள்? அவரது உடல் நிலை எவ்வாறு இருந்தது? சசிகலா மீது குற்றம்சாட்ட காரணம் என்ன என்பன உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.