முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகச் சொல்லி எட்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
இதனையடுத்து 9வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் இன்று நேரில் ஆஜராகி அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் 78 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு ஓ.பி.எஸின் பதில் ‘தெரியாது’ என்றே இருந்திருக்கிறது.
அதன்படி விசாரணை கமிஷன் முன் ஓ.பன்னீர்செல்வம் அளித்த வாக்குமூலத்தின் விவரம்:
2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற எந்த விவரம் எனக்கு தெரியாது.
சொந்த ஊரில் இருந்தபோது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலம்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எனத் தெரிந்துகொண்டேன்.
அடுத்த நாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனை சென்றபோது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன்.
ஜெயலலிதா மருத்துவமனை அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்துகொண்டபோது ஜெயலலிதாவைப் பார்த்தேன்.
ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
சசிகலாவின் அழைப்பின் பேரில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்க கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நடைபெற்ற காவிரி கூட்டம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அறிக்கை வந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்.
அந்த கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவிடம் கூட்டம் தொடர்பாக கேட்டபோது, முதலமைச்சர் தனக்கு டிக்டேட் செய்ததாக என்னிடம் தெரிவித்தார்.
காவிரி கூட்டத்திற்கு பிறகு ஜெயலலிதாவிற்கு இதய பிரச்சனை ஏற்பட்டு உடல் நலனில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது எனக்கு தெரியாது. அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் நான் முதல்வரின் உடல்நிலை குறித்து விஜயபாஸ்கரிடம் நான் கேட்டதற்கு இதய பிரச்சினை இருந்ததாகக் கூறினார்.
ஜெயலலிதாவிற்கு இதய பாதிப்பு ஏற்பட்டபோது என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும், யார் முடிவு செய்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது தொடர்பாகவும் எனக்கு எதுவும் தெரியாது.
தர்மயுதம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே. அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆரை போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் கூறினேன்.
அப்பல்லோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என விஜயபாஸ்கர் சொன்னதாகவும், மறுநாள் காலை அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டியை சந்தித்து இதே கருத்தை வலியுறுத்தியதாகவும், ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என விஜயகுமார் ரெட்டி கூறினார்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து, விசாரணை ஆணையத்தில் ஆஜரான முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து அமைச்சரவையை கூட்ட சொன்னதாகவும், நான்கு நாட்கள் பரபரப்பாக பேசி பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருந்ததை சுட்டிக்காட்டி ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ராம் மோகன் ராவ் அது தொடர்பாக தன்னிடம் எதுவும் பேசவில்லை எனவும், அவ்வாறு கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் எனவும் பதிலளித்துள்ளார்.
மேலும், அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.