நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது சிறு சிறு இடங்களில் பரவிய காட்டுத்தீயானது தட்டப்பள்ளம் வனப்பகுதிக்குள் பரவியது.
அவ்வாறு நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் பரவிய காட்டுத்தீ வனப்பகுதி முழுவதும் மளமளவென பரவியது. மலைப்பாங்கான இடத்தில் காட்டுத்தீ பரவியதால் உடனே தீயணைப்பு மற்றும் காவல்துறையினரகக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மலைப்பாங்கான வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியதால் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவியது.
இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள், வன ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் நேற்று இரவு முதல் பணி மேற்கொண்டு வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே காற்றின் வேகம் அதிகரித்தால் தீயின் அருகே யாரும் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் வாழ்ந்து வந்த மான்கள், காட்டு மாடு, சிறுத்தை மற்றும் அறிய வகை பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தன. காலை ஏழு மணிக்கு மேல் காற்றின் வேகம் குறைந்தால் காட்டுத்தீயை கட்டு படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இரவு எட்டு முதல் காலை எட்டு மணி வரை காட்டுத்தீயானது 12 மணி நேரமாக காட்டுத்தீ எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மூன்று நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கலாம் என வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.