தருமபுரி அடுத்த மாரவாடி பகுதியில் பிரபல தனியார் கிரைனைட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபாய் (20) மற்றும் ஆதித்யா சௌந்தர்யா (40) என்ற இருவரும் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்கள் இருவம் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில், இருவரும் இணைந்து மது அருந்துவது வழக்கம்.
அவ்வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதை அறிந்த கிரைனைட் உரிமையாளர் இருவரையும் சமாதானம் செய்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத இருவரும் மீண்டும் சண்டை போட்டுள்ளனர். இதனையடுத்து உடனடியாக இருவரையும் தொழிற்சாலையில் இருந்து வெளியில் அனுப்பியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து கிரானைட் கம்பெனி உரிமையாளருக்கு தெரியாமல், கம்பெனிக்குள் வந்து தங்கியுள்ளனர். அப்போது மதுபோதை அதிகமானதில் உறங்கும் இடத்தில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பாபாய் ஓரிடத்தில் படுத்து உறங்கியுள்ளார். தொடர்ந்து பாபாய் உறங்கும் நேரத்தில் ஆதித்யா சௌந்தர்யா, பெரிய சம்மட்டியால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மூளை சிதறி நிலையில் பாபாய் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
பின்னர் சமட்டியை வீசிவிட்டு ஆதித்யா சௌந்தர்யா அங்கிருந்து தப்பியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பாபாயை பார்த்து, உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மதிகோனாபாளையம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொலையுண்ட பாபாய்யின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேரில் ஆய்வு செய்து, கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்தார்.
இந்த தனிப்படை காவல் துறையினர், குற்றவாளியை பிடிக்க பெங்களூர் விரைந்தனர். தருமபுரி அருகே கிரானைட் கம்பெனியில், வட மாநில தொழிலாளி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.