சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பொன்.பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற அலுவலக உதவியாளரை போலிஸார் கைது செய்தனர்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பொன்.பாண்டியன். இன்று பணிக்கு வந்த நீதிபதி பொன்.பாண்டியன் தன்னுடைய அறையில் வழக்கு விசாரணை குறித்து குறிப்பு எடுத்துக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போய்ஜி அங்கு அலுவலக உதவியாளராக பணிபுரிந்த பிரகாஷ் என்பவர் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றுள்ளார். இதனைப் பார்த்து சுதாரித்த நீதிபதி, அலறியபடி வெளியே ஒடி வந்துள்ளார்.
தாக்குதலில் நீதிபதி பொன்.பாண்டியனுக்கு மார்பு பகுதியில் சிறு காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மற்றும் போலிஸார் பிரகாஷை மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து அவரை, அஸ்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பிரகாஷுக்கு பல முறை பணியிட மாறுதல் வழங்கப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கத்தியால் குத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்த நீதிபதி பொன்.பாண்டியன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் வைத்தே நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.