தமிழ்நாடு

தி.மு.க பிரமுகரை தாக்கி, கொலை மிரட்டல்.. சிறையில் உள்ள ஜெயக்குமாருக்கு மீண்டும் ஜாமீன் மறுத்த நீதிமன்றம்!

திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஜாமீன் வழங்கவில்லை, விசாரணையை நாளை ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

தி.மு.க பிரமுகரை தாக்கி, கொலை மிரட்டல்.. சிறையில் உள்ள ஜெயக்குமாருக்கு மீண்டும் ஜாமீன் மறுத்த நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 49வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலான அ.தி.மு.க-வினர் அங்கிருந்த தி.மு.க பிரமுகர் நரேஷ் என்பவரை பிடித்து தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இந்த சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் லைவாக காட்டிய நிலையில் அந்த வீடீயோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜெயகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட தி.மு.க பிரமுகர் நரேஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல்துறை 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 113 அ.தி.மு.க-வினர் மீது ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தி.மு.க பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் நேற்று முன்தினம் இரவு மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வரும் மார்ச் 7 ஆம் தேதி வரை பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.

அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை மீண்டும் ராயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது வழக்கில் அவரை கைது காட்டுவதற்காக பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை கைது காட்ட போலீசார் ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஜாமீன் வழங்க கோரி ஜெயக்குமார் தரப்பு மனுதாக்கல் செய்யபட்டது. முன்னதாக சென்னை ராயபுரத்தில் அரசு உத்தரவை மீறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டு ராயபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கில் மார்ச் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நேற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்ற மாஜிஸ்தேரட் உத்தரவிட்டார்.

இதேபோல் திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையில், காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் பாதிக்கப்பட்டவரை 1,000 பேர் முன்பு மிரட்டியுள்ளார் என்றும் "சாவடிங்கடா" என்று கொலை மிரட்டல் விடுத்தார். இது கொலை முயற்சியாகும் என்பதால் தான் இந்த வழக்கை 307ஆக மாற்றியுள்ளதாகவும், தகவல்தொழில் நுட்ப பிரிவு வழக்கும் ஜெயக்குமார் மீது சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

வழக்கின் வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது தி.மு.க பிரமுகர் நரேஷ் சார்பாக மூத்த வழக்கறிஞர், N.R இளங்கோ ஆஜராகி ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்னும் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு விளக்கம் அளிக்கவும் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.

banner

Related Stories

Related Stories