தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்குக் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலையில் 8 மணியிலிருந்து 268 மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வெளியான முடிவுகள் படி தி.மு.க கூட்டணி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை முழுமையாகக் கைப்பற்றி வருகிறது. அதேபோல் அ.தி.மு.க பலமாக இருந்த கொங்கு மண்டலத்திலும் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
அதேபோல் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க இளம் வேட்பாளர்களும் மக்களின் அமோக ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை கோடம்பாக்கம் 136வது வார்டில் போட்டியிட்ட 22 வயதே ஆன நிலவரசி துரைராஜ் பெற்றி பெற்று அசத்தியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் 1,137 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
அதேபோல் எழும்பூர் 99வது வார்டில் போட்டியிட்ட பரிதி இளம் சுருதி வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அ.தி.மு.க ஆதரவுடன் போட்டியிட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் சிவகாமி படுதோல்வியடைந்துள்ளார்.
மேலும் மதுரை 79வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க இளம்பெண் வேட்பாளர் லக்ஷிகா ஶ்ரீ அபார வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் கொடைக்கானல் 7வது வார்டில் போட்டியிட்ட பிரபா ஷாமிலி ஜீவா பெற்றி பெற்றுள்ளார்.
ஓசூர் நகராட்சியில் 13வது வார்டில் தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட சட்டக் கல்லூரி மாணவி யஷாஸ்வினி, 640 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்தி பெற்றி பெற்றுள்ளார். நாகர்கோவில் மாநகராட்சியின் 17ஆவது வார்டு உறுப்பினராக 21 வயது பட்டதாரி இளம்பெண் கெளசுகி வெற்றி பெற்றுள்ளார்.