நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இதனிடையே சென்னை மயிலாப்பூர் கேசவபுரம் தெற்கு கோவில் தெருவில் வீடு வீடாக டோக்கன் கொடுக்கப்படுவதாக 9-வது மண்டல பறக்கும்படை தேர்தல் அதிகாரி தேவகுமாரனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி மற்றும் மயிலாப்பூர் போலிஸார் மயிலாப்பூர் கேசவபுரம் தெற்கு கோவில் தெருவிற்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அதிமுகவைச் சேர்ந்த 124-வது வட்ட செயலாளர் தங்கதுரை என்பவர் வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் போது மடக்கி பிடித்தனர்.
அவரிடம் தேர்தலுக்கு வாக்களிக்கும் நபர்களுக்கு QR குறியீடு கொண்ட அதிமுக சின்னம், ஜெயலலிதா படம் அச்சடிக்கப்பட்ட கார்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் வைத்திருந்த நோட்டு ஒன்றில் பல பெயர்கள் கையால் எழுதப்பட்ட துண்டுச்சீட்டு வைத்திருந்ததையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தங்கதுரையை மயிலாப்பூர் போலிஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.