விளையாட்டு கோட்டாவில் தென்னக ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர் மீது சென்னை பரணிபுத்தூரைச் சேர்ந்த வினோத் என்பவர் பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
அதில், தனக்கும், தனது அண்ணனுக்கும் சென்னையில் உள்ள தென்னக ரயில்வேயில் AE வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றியும், வேலை தேடிக் கொண்டிருக்கும் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை பெற்றுத்தருவதாகச் சொல்லி 1.70 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த புகார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், வினொத்தின் புகார் உறுதிபடுத்தப்பட்டதால் கமிஷ்னர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, புலன் விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் ரெஜினா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனையடுத்து வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜெயகாந்தன் (37) என்பவரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தென்னக ரயில்வேயில் கபடி பயிற்சியாளராக தான் பணியாற்றுவதாகவும், தென்னக ரயில்வே வேலைகளுக்கு Station master, JE, AE, ticket section, mechanic, rpf போன்ற பணியிடங்களுக்கு விளையாட்டு கோட்டா மூலம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 43 பேரிடம் பணத்தை வாங்கி போலி நியமன ஆணைகளை கொடுத்து ஏமாற்றியது அம்பலமானது.
மேலும் ஜெயகாந்தனிடம் இருந்து போலி நியமன ஆணைகள் மற்றும் போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.