தமிழ்நாடு

”இந்தியாவுக்கான ஒளி விளக்கு இந்த நீட் விலக்கு மசோதா” - சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நீட் விலக்கு சட்டமுன்வடிவை நிறைவேற்றி மீண்டும் அனுப்பி வைப்பதன் மூலமாக இந்தியாவுக்கே ஒரு ஒளிவிளக்கை நாம் ஏற்றி வைக்கிறோம்

”இந்தியாவுக்கான ஒளி விளக்கு இந்த நீட் விலக்கு மசோதா” - சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மசோதா சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தின் போது இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-

”மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இது ஏதோ நீட் விவகாரம் மட்டுமல்ல என்பதை நான் தொடக்கத்தில் சொன்னேன். ஒரு சட்ட மமோசாதவை நிறைவேற்றினோம். அதை ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்று மட்டும் நான் பார்க்கவில்லை. யாரும் அப்படி பார்க்க மாட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன்.

இந்த சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பியதன் மூலமாக இந்த தமிழ்நாடு மாநிலத்தின் உரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சட்டமன்றங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமான வழிகாட்டியான ஒரு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவை நிறுத்தி வைக்க முடியும், உதாசீனப்படுத்த முடியும் என்றால் இந்த இந்திய உபகண்டத்தில் மாநிலங்களின் கதி என்ன?

பல்வேறு இனம், மொழி,கலாச்சாரப் பண்பாடு கொண்ட மக்களின் நிலைமை என்ன?

என்ன நம்பிக்கையில் மக்கள் வாக்களிப்பார்கள்?

யாரை நம்பி வாக்களிப்பார்கள்?

என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி ஆகும்.

வலிமையான சாம்ராஜ்யங்கள் சரித்திரத்தின் பக்கங்களில் மட்டும் தான் இருக்கின்றன. ஆனால் பாகுபாட்டுக்கு எதிரான அசோகர் தான், மக்களால் நினைக்கப்படுகிறார்.

பலதரப்பட்ட மனிதர்களை உள்ளடக்கிய இந்திய நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை கேலி செய்வதாக சமீப காலக் காட்சிகள் அமைந்து வருவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இந்த நேரத்தில் நான் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன். சமூகநீதி மட்டும் தான் திராவிட இயக்கத்தின் கொடை என்று சிலர் நினைக்கிறார்கள். மாநில சுயாட்சியும் திராவிட இயக்கத்தின் கொடை தான்.

1918 அக்டோபர் 2 அன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசியவர் நீதிக்கட்சித் தலைவரான டி.எம்.நாயர் அவர்கள். அவர் தான் 1917ஆம் ஆண்டிலேயே மொழிவாரி மாநிலங்களுக்காகக் குரல் கொடுத்தார். மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்றும் அவர் 1917 ஆம் ஆண்டு சொன்னார். அப்படிச் செய்தால் தான் கூட்டாட்சி முறை வெற்றி பெறும் என்றவரும் அவரே. அந்த டி.எம்.நாயரை நினைத்துப் பார்க்கிறேன்.

அவர் சொல்லி 100 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும் மாநிலங்களின் உரிமைக்காக இன்னமும் நாம் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

நிதி ஒதுக்கீட்டுச் சட்ட முன்வடிவின் மீது- 15.7.1967 அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றிய போது, “மத்திய சர்க்காருக்கும், மாநில சர்க்காருக்கும் உள்ள தொடர்புகள் எந்தக் கட்சி ஆட்சி நடத்தினாலும் – சட்டப்படி இருக்கின்ற தொடர்புகள், நடைமுறையிலே உள்ள தொடர்புகள் இவைகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் சட்டத்தையே கூட திருத்த வேண்டுமென்றாலும் அதற்கும் தயக்கம் கூடாது. அதற்கான ஒரு கமிஷன் அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் இதுவரை வலியுறுத்திக் கொண்டு வந்ததைப் போலவே இனியும் வலியுறுத்திச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். அப்படி முழங்கிய பேரறிஞர் அண்ணாவை திரும்பிப் பார்க்கிறேன்.

“நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு நேரா வண்ணம் மாநில சுயாட்சி அடிப்படையில் மத்திய மாநில உறவுகளை ஆராய” சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜமன்னார் அவர்கள் தலைமையில் 22.9.1969 அன்று குழு அமைத்த தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களை நினைத்துப் பார்க்கிறேன்.

அனைத்திற்கும் மேலாக-மாநில சுயாட்சி தீர்மானம் 16.4.1974 அன்று இதே அவையில் கொண்டு வரப்பட்டு ஏப்ரல் 20 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க வாதங்களை படித்துப் பார்த்து- இச்சட்டமன்றத்தின் நீண்ட நெடிய வரலாறுகளை பெருமிதத்துடன் நெஞ்சில் ஏற்றிக் கொண்டிருக்கிறேன்.

அதிலும் குறிப்பாக- தீர்மானத்தின் மிக முக்கியமான வாசகமாக “மத்தியில் கூட்டாட்சி- மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் ராஜமன்னார் குழு அறிக்கையை ஏற்று இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை முடிவு செய்கிறது” முன்மொழிந்த முத்தமிழறிஞர் கலைஞரின் வரிகளும் “மாநிலங்கள் மட்டும் மத்திய அரசுத் தேவையான அதிகாரக் குவியல்கள் என்னும் விலங்குகளால் கட்டுண்டு கிடப்பானேன்? இந்தக் கேள்வியின் நீண்ட நாளைய தாகத்தைத் தீர்க்கும் நெல்லிக்கனியாகத்தான் இன்று இந்த மாபெரும் சபைதனில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்த முத்தமிழறிஞர் எத்தகைய தீர்க்கதரிசி என்பதை எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன்.

அன்றைய தினம் “இந்திய அரசியல் அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் நாம் ஏற்றி வைக்கும் இந்தச் சுடர் விளக்கு ஒளிவிட வேண்டும்” என்றவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதைத்தான் இன்றைக்கு நாம் எதிர்பார்க்கிறோம். நீட் விலக்கு சட்டமுன்வடிவை நிறைவேற்றி மீண்டும் அனுப்பி வைப்பதன் மூலமாக இந்தியாவுக்கே ஒரு ஒளிவிளக்கை நாம் ஏற்றி வைக்கிறோம்.” இவ்வாறு முதலமைச்சர் பேசியிருந்தார்.

banner

Related Stories

Related Stories