தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வேட்பு மனு தக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடுவதற்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாநகராட்சி 24வது வார்டில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் பரசுராமன், பா.ம.க சார்பாக போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பதை உணர்ந்து, தி.மு.க பொறுப்பாளர்களை நேரில் சந்தித்தார்.
ஆனால், அரசியல் உள்நோக்கம் காரணமாக பா.ம.கவினர், அவரை தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என மிரட்டியதாக பொய்யான பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ், வேலூர் மாநகராட்சி 24வது வார்டில், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி.பரசுராமனை தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் இருவர் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.'' என தெரிவித்தார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸின் குற்றச்சாட்டு குறித்து அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவும், வேலூர் மாவட்ட தி.மு.க செயலாளருமான ஏ.பி.நந்தகுமார் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மரியாதைக்குரிய பா.ம.க நிறுவனர் அய்யா மருத்துவர் ராமதாஸ் அவர்களே வேலூர் மாநகராட்சி 24 வார்டு பா.ம.க வேட்பாளர் பரசுராமன் அவர்களை யாரும் மிரட்டவுமில்லை, கடத்தவுமில்லை,மாறாக அந்த 24 வார்டில் அவர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால், எங்களை நேரில் சந்தித்து எங்களுக்கு சால்வை அணிவித்து தி.மு.கவில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது ஆகவே தனக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்குமாறு கேட்டுக் கொணாடார்.
அது தி.மு.க நிர்வாகிக்கு ஏற்கனவே ஒதுக்கிவிட்ட காரணத்தை அவரிடம் கூறிவிட்டோம், இதற்கான ஆதாரமும் இருக்கிறது. அவரை மிரட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. இந்த உண்மையை நன்கு விசாரிக்காமல் எங்கள் மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைப்பது ஏற்புடையதல்ல காரணம், பா.ம.க வேட்பாளரை மிரட்டி வெற்றிபெற வேண்டிய நிலையில் தி.மு.க எப்போதும் இருந்ததில்லை என்பதை தாங்களும் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.