திருப்பெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா (43) . இவர் மீது 8 கொலைகள், 9 கொலை முயற்சிகள் 8 வழி 6 அச்சுறுத்தி மிரட்டுதல் மற்றும் நான்கு மணல் வழக்குகள் உட்பட மொத்தம் 48 வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருமுறை தடுப்புக்காவல் குண்டாஸ் நடவடிக்கை இவர் மீது எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க ஏ.டிஎஸ்.பி வெள்ளைதுரை நியமிக்கப்பட்டார். இவர் செய்த ஆபரேஷன் மூலம் தலைமறைவு குற்றவாளியான பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு உதவியாக இருந்த 30 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் படப்பை குணா மற்றும் இவரது கூட்டாளிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டும். குணாவின் மனைவி உட்பட பலரை போலிஸார் தங்கள் வளையத்திற்குள் வைத்து விசாரித்து வந்தனர். குணாவின் நெருங்கிய நண்பர்கள் போந்தூர் சிவா உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
குணாவின் முக்கிய கூட்டாளிகளான போந்தூர் சேட்டு, மாம்பாக்கம் பிரபு உள்ளிட்டோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தநிலையில் ரவுடி குணா, போந்தூர் சேட்டு தலைமறைவாகிவிட்டனர். மாம்பாக்கம் பிரபுவை தொடர்ந்து காவல்துறையினர் கண்காணித்துவந்துள்ளனர்.
இவர் மூலம் தான் படைப்பை குணா தொழில் நிறுவனங்களில் நுழைந்து மிரட்டி அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. மாம்பாக்கம் பிரபு கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாதாரண இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்.
இன்று பிரபல ரவுடி குணாவின் உதவியோடு திருப்பெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஸ்கிராப் எடுப்பது மேன்பவர் சப்ளை செய்வது, மற்றும் நிறுவனங்களுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் சப்ளை செய்வது மற்றும் கட்டப்பஞ்சாயத்து அடிதடி ஆகிய தொழில்கள் செய்து வந்துள்ளார்.
தலைமறைவாக இருந்த படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி சரணடைந்த நிலையில், பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் கடந்த ஆண்டு பிறப்பித்த 110 நன்னடத்தை விதிமீறல் தொடர்பாக திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்தர் கடந்த 4 ஆம்தேதி விசாரணை நடத்தினார்.
அதனைத்தொடர்ந்து பிரபல ரவுடி படைப்பை குணாவின் நெருங்கிய கூட்டாளிகள் மாம்பாக்கம் பிரபு இன்று கைது செய்யப்பட்டு அவரை போலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இவரிடமிருந்த விலை உயர்ந்த பென்ஸ் கார் உட்பட நான்கு சொகுசு கார்கள் போலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குணாவின் கூட்டாளிகளில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முக்கிய புள்ளியான போந்தூர் சேட்டு காவல்துறையினரை ஏமாற்றி, சென்னையில் தலைமறைவாக இருந்துகொண்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக நாடகம் ஆடி வந்த நிலையில், காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.
படப்பை குணா மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த முக்கிய கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு இருப்பதால் கடந்த அ.தி.மு.க ஆட்சியில், ரவுடி படைப்பை குணா செல்வாக்கு பெற உதவி செய்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் காஞ்சி மாவட்ட அதிமுக பிரபலங்கள் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.