கோவை மாவட்ட, அனுவாவி சுப்பிரமணியன் கோயிலுக்குச் செல்லும் வழியில் காட்டு யானை ஒன்று நடக்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளது. இதை அவ்வழியாகச் சென்று மக்கள் பார்த்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் உடனே அங்கு வனத்துறையினர் சென்று ஆய்வு செய்தனர். அப்போது உடல்நலக்குறைவால் பெண் யானை மயங்கி விழுந்தது தெரியவந்தது. பிறகு யானைக்குச் சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மருத்துவக் குழுவினர் அங்கு வந்து யானைக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் யானை விழுந்த இடத்திலேயே கூடாரம் ஒன்று அமைத்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை கொடுத்து வருகின்றனர். யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் யானைக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கும், வனத்துறைக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.