சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் அன்னை அஞ்சுகம் தெருவில், ஒரு நபர் ரத்த வெள்ளத்தில் இருப்பதாக பல்லாவரம் போலிஸாருக்கு குடியிருப்பு வாசிகள் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் பல்லாவரம் போலிஸார் நிகழ்விடத்திற்கு சென்று ஆம்புலன்ஸ் வரவழைத்து பார்த்ததில், அந்த நபர் இறந்து விட்டது தெரியவந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவர் யார் என தெரியாததால் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது இருவர் கடப்பாரையுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து செல்வது தெரியவந்தது.
இருவரையும் தேடி வந்த நிலையில், ஜோதி என்பவர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். விசாரணையில் பாஸ்கர், ஜோதியிடம் செண்டரிங் வேலை செய்து வருவதும், அடிக்கடி குடித்து விட்டு வேலை வந்ததால் வேலையை விட்டு நிறுத்திவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர், ஜோதியின் மனைவியிடம் சென்று வேலை கொடுக்க சொல்லி மிரட்டி வந்துள்ளார்.
இல்லையென்றால் ஜோதியை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் ஜோதி மனைவியின் பூக்கடைக்கு சென்று கையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை மனைவி ஜோதியிடம் கூறியதால் ஜோதி மற்றும் அவரது உறவினர் தமிழ்செல்வன் இருவரும் இணைந்து பாஸ்கரை கடப்பாரையால் தலையில் அடித்துக் கொன்றதும் தெரியவந்தது. பின்னர் தமிழ்செல்வனையும் கைது செய்த பல்லாவரம் போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.