தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து கோவை வேளாண் கல்லூரிக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் நாகராஜ், பிரேமலதா, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கல்யாணசுந்தரம், சுமித்ரா ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்த கார் திருப்பூர் மாவட்டம், சாலக்கடை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக உடைந்தது.
இந்த விபத்தில், நாகராஜ் மற்றும் பிரேமலதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த கல்யாணசுந்தரம், சுமித்ரா ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கல்யாணசுந்தரம் தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் சுமித்ரா கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.