சென்னை மதுரவாயல் திமுக மகளிர் அணி நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் பாரதி. இவர் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நேர்காணலுக்கு வந்த போது, கிண்டி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள தனியார் உணவகத்திற்கு மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார்.
அப்போது உணவகத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்த செல்லும் போது, அங்கு உள்ள சுவற்றில் அட்டைப் பெட்டி இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்துள்ளார். அதை எடுத்துப் பார்க்கும் போது செல்போன் கேமரா வீடியோ பதிவாகி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தன்னுடன் வந்த உறவினர்களோடு செல்போனை பறிமுதல் செய்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
விசாரணை செய்ததில் உணவக ஊழியர் கண்ணன்(எ) தவக்கண்ணன் என்பவர், தனது செல்போனை பாத்ரூமில் வைத்து பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது. உணவக ஊழியர் கண்ணனை காவல் நிலையம் அழைத்து சென்ற கிண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கண்ணன் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டில் சிக்கிய உணவக ஊழியரான கண்ணன் என்பவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் கடந்த 3 மாதமாகத்தான் உணவகத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக திமுக மகளிரணி நிர்வாகி பாரதி அளித்த புகாரின் பேரில் கிண்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் . மேலும், கிண்டி போலீசார் செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட கண்ணன் எத்தனை நாட்கள் இது போன்று பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
கண்ணனுக்கு உடந்தையாக செயல்பட்டது யார் யார் என்கின்ற கோணத்தில் கிண்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்துதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.