தமிழ்நாடு

7 பேரை தாக்கி 4 நாட்களாக மக்களை அலறவிட்ட சிறுத்தை.. மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை- முழு விவரம் இதோ!

திருப்பூர் அருகே பதுங்கியிருந்து 7 பேரை தாக்கி பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சிறுத்தைப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தது வனத்துறை.

7 பேரை தாக்கி 4 நாட்களாக மக்களை அலறவிட்ட சிறுத்தை.. மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை- முழு விவரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருப்பூர் பாப்பாங்குளம் பகுதியில் பதுங்கியிருந்து 7 பேரை தாக்கி பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சிறுத்தைப் புலி இன்று மதியம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா பாப்பாங்குளம் எனும் பகுதியில் சோளக் காட்டிற்குள் பதுங்கியிருந்த சிறுத்தை கடந்த திங்கட்கிழமை காலை 6 மணியளவில் மாறன் மற்றும் வரதராஜன் ஆகிய இருவரை தாக்கியது. தகவலறிந்து சோளக்காட்டில் ஒன்றுகூடிய பொதுமக்களில் மேலும் இரு நபர்களை சிறுத்தை தாக்கியது. நான்கு நபர்களை சிறுத்தை தாக்கிய நிலையில் உடனடியாக வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் பாப்பாங்குளத்திற்கு வந்தனர்.

சிறுத்தை பதுங்கியிருக்கும் சோளக்காட்டை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சோளத்தட்டையைச் சுற்றி மூன்று தூண்கள் அமைத்து மாமிசங்களை உள்ளே வைத்து சிறுத்தை வருகிறதா என கண்காணித்து வந்தனர். திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த வன ஊழியர் வீரமணிகண்டனை சிறுத்தை தாக்கியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை சோளக் காட்டில் இருந்து சிறுத்தை வெளியேறாத வண்ணம் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் சோளக்காட்டில் இருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி துவங்கப்பட்டது. க்ரேன் கொண்டு வரப்பட்டு தேடும் பணி துவங்கியது. பட்டாசுகள் வெடிக்கப்பட்டும், சைரன் ஒலிக்கப்பட்டும் எந்தவிதமான அறிகுறியும் தென்படாததால் சந்தேகமடைந்த வனத்துறையினர் நேரடியாக சோளக்காட்டிற்குள் இறங்கி தேடினர். அப்பொழுது சிறுத்தை வெளியேறியது தெரியவந்தது.

உடனடியாக அருகாமையில் இருக்கும் கிராம மக்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதுடன் சிறுத்தையை தேடும் பணி ஆரம்பமானது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பெருமாநல்லூர் பகுதியில் சிறுத்தை தென்படுவதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.

7 பேரை தாக்கி 4 நாட்களாக மக்களை அலறவிட்ட சிறுத்தை.. மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை- முழு விவரம் இதோ!

புதன்கிழமை காலை பெருமாநல்லூர் பொங்குபாளையம் எனும் இடத்தில் துரை என்பவருக்கு சொந்தமான காட்டில் சிறுத்தையின் எச்சங்களும், கால் தடமும் கண்டறியப்பட்டது. உடனடியாக பொங்குபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உடன் மேலும் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் தெரிகிறதா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள அம்மாபாளையம் எனும் இடத்தில் வேஸ்ட் குடோனில் வேலை பார்த்த ராஜேந்திரன் என்பவரையும் வேட்டை தடுப்பு காவலர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் நான்காவது நாளாக இன்றும் ஈடுபட்டனர்.

1 மணி நேரத்திற்கும் மேலாக குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தை வனத்துறையினரின் கண்காணிப்பையும் மீறி குடோனில் இருந்து வெளியேறியது. அருகாமையில் இருக்கும் முட்புதரில் சிறுத்தை பதுங்கியதை உறுதி செய்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அருகாமையில் சென்றனர். அப்போது சிறுத்தை வெளியேற முயன்ற நிலையில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி மருத்துவர் விஜயராகவன் நொடிப்பொழுதில் மயக்க ஊசி செலுத்தினார்.

இதனையடுத்து முட்புதரில் இருந்து வெளியில் வந்த சிறுத்தை அருகாமையில் இருந்த புதருக்குள் அரை மயக்கத்துடன் சென்றது. மயக்கமடையும் வரை காத்திருந்த வனத்துறையினர், மயக்கமடைந்த சிறுத்தையை கூண்டு வைக்கப்பட்ட வண்டியில் ஏற்றி டாப்சிலிப் வனச்சரகத்திற்குட்பட்ட மத்திரி மட்டத்திற்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் கூறுகையில், நான்கு நாட்கள் நடைபெற்ற தேடுதல் வேட்டை வெற்றியில் முடிந்தது கிராமப் பகுதிகளில் இருந்து திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சிறுத்தை புகுந்த நிலையில் மக்கள் நடமாட்டம் மிக அதிகமாக இருந்தது. எனினும் வனத்துறை ஊழியர்கள் திறம்பட செயல்பட்டனர். அதற்கு தகுந்தாற்போல் நான்கு மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

இந்த பணியின்போது வனத்துறையை சேர்ந்த 3 பேர் சிறுத்தை தாக்கி காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்படும் எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories