தங்க நகை மற்றும் பணம் டெபாசிட் செய்தால் அதிக வட்டி தருவதாகக் கூறி சேலத்திலுள்ள லலிதா சில்வர் ஜுவல்லரி என்ற தனியார் நகைக்கடை உரிமையாளர்கள் ஏராளமானவர்களிடம் வசூலித்த நகை மற்றும் பணத்தை அள்ளிக்கொண்டு தலைமறைவாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகர் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த தங்கராஜ்- லலிதா தம்பதியினர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாநகரில் உள்ள தேர் வீதியில் லலிதா சில்வர் ஜுவல்லரி என்ற பெயரில் சிறிய அளவிலான கடையை திறந்தனர்.
அங்கு ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் 3,000 ரூபாய் வட்டி தருவதாக அதேபோல தங்க நகைகளை டெபாசிட் செய்தால் ஒரு பவுனுக்கு 600 ரூபாய் வீதம் வட்டி தருவதாகக் கூறி ஏராளமான வருடம் பணம் மற்றும் நகைகளை வசூலித்தனர். மேலும், கடையில் வேலை செய்யக்கூடிய பணியாளர்களை வைத்து பணம் மற்றும் நகைகளை வசூலித்துள்ளனர்.
அதிக வட்டி தருவதாக கூறிய நகைக்கடைக்காரர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏராளமானோர் 10 லட்சம், 15 லட்சம், 25 லட்சம் என பணம் முதலீடு செய்ததோடு, தங்கள் வீட்டில் வைத்திருக்கும் நகையை டெபாசிட் செய்தால் அதற்கும் வட்டி சம்பாதிக்கலாம் என்ற நோக்கில் தங்க நகைகளையும் டெபாசிட் செய்துள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக நல்லமுறையில் வட்டியை செலுத்திவந்த நகைக்கடை உரிமையாளர் தங்கராஜ் கடந்த சில மாதங்களாக முறையாகப் பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பணம் மற்றும் நகைகளை டெபாசிட் செய்தவர்கள் கடை உரிமையாளர் தங்கராஜ் மற்றும் கடையில் பணியாற்றக்கூடிய ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக கடையில் இருந்த பொருட்களை எடுத்து தனது காரில் வைத்துக்கொண்டு தங்கராஜ் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார். இதனை அறிந்த டெபாசிட்தாரர்கள் இன்று பொன்னம்மாபேட்டையில் உள்ள தங்கராஜின் மாமனார் தேவராஜனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்த அம்மாபேட்டை போலிஸார், சம்பவ இடத்திற்கு வந்து, இதுகுறித்து புகார் கொடுக்குமாறு தெரிவித்து, அவர்களை கலைந்து செல்ல வைத்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் கூறும்போது, அதிக வட்டி தருவதாக கூறி தங்களிடம் லட்சக்கணக்கில் பணம் மற்றும் தங்க நகைகளை டெபாசிட் பெற்றுள்ளனர். 4 கோடி ரூபாய் பணம் மற்றும் 4 கிலோ தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடித்து பணம் நகைகளை மீட்டுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்கராஜ் தனது கடையில் இருந்து இரவு நேரத்தில் நகை மற்றும் பணத்தை எடுத்து, காரில் வைத்துக்கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் இருப்பதாக கூறி, அதை ஆதாரத்துடன் வெளியிட்டு தற்போது புகார் தெரிவித்துள்ளனர்.
அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை டெபாசிட் பெற்று, அதனை சுருட்டிக்கொண்டு தம்பதியினர் தலைமறைவான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.